கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மதுரையில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர்.
கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியைப் பட்டப் படிப்பாக உயர்த்துவது, இணைய வசதியுடன் கூடிய கணினி வழங்குவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது, கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பூதியம் அளிப்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், நவம்பர் 28 முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 10 ஆம் தேதி முதல்  மதுரை மாவட்டத்தில் இச் சங்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர்  காலவரையற்ற  வேலை
நிறுத்தப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோரிக்கை விளக்கப் பேரணி நடைபெற்றது.
ராஜா முத்தையா மன்றம் அருகே தொடங்கிய இப் பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. பின்னர் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க மாவட்டத் தலைவர் ஜெயபாஸ்கர் தலைமை 
வகித்தார். மாவட்டச் செயலர் சொ.ராஜாமணி, துணைத் தலைவர் அக்னிராஜா, துணைச் செயலர் தங்கபாண்டி, பிரசார செயலர் பிரபாகரதாஸ், அமைப்புச் செயலர் சீதா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  அதைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 
கூட்டுப் போராட்டம், டிசம்பர் 24-இல் சட்டப்பேரவை உறுப்பினர்களைச் சந்தித்து மனு அளிப்பது,  டிசம்பர் 26-இல் மக்களவை உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்தல்,  டிசம்பர் 27 
இல் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com