மதுபோதையில் வாகனம் ஓட்டியவரை பிடித்த  போலீஸார் மீது சார்பு-ஆய்வாளர் நடவடிக்கை

மதுரையில் மது போதையில் வாகனம் ஓட்டி தகராறில் ஈடுபட்டவரை பிடித்து அபராதம் விதித்த போலீஸார்

மதுரையில் மது போதையில் வாகனம் ஓட்டி தகராறில் ஈடுபட்டவரை பிடித்து அபராதம் விதித்த போலீஸார் மூவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மதுரை நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் டிசம்பர் 6-ஆம் தேதி சிறப்பு சார்பு- ஆய்வாளர் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனைச் சாவடியில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் செல்லும்  வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் மதுபோதையில் இருந்ததை அடுத்து அவரது வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது மதுபோதையில் இருந்த நபர் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதோடு, தல்லாகுளம் காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் ஒருவரது பெயரைக்கூறி அவரது உறவினர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் மதுபோதையில் இருந்த நபர் போலீஸாரை தரக்குறைவாக பேசியதாலும், வாகனத்தில் ஆவணங்கள் எதுவும் இல்லாததாலும் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து சார்பு- ஆய்வாளர், போலீஸாரை தொடர்புகொண்டு, மதுபோதையில் பிடிபட்டவரை விடுவிக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அபராதம் விதித்து விட்டதை சிறப்பு சார்பு- ஆய்வாளர் மற்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து டிசம்பர் 9-ஆம் தேதி சிறப்பு சார்பு- ஆய்வாளர் மற்றும் இரு போலீஸார் பணி முடிந்த நிலையில் காவல்நிலையத்தில் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து பணி ஒப்படைவு செய்து விட்டுச்சென்றுள்ளனர். ஆனால் சிறப்பு சார்பு -ஆய்வாளர் உள்பட மூன்று போலீஸாரும் பணிக்கு வரவில்லை என்று காவல்நிலையத்தில் இருந்த சார்பு- ஆய்வாளர் மூவருக்கும் குறிப்பாணை வழங்கும் ஆவணங்களை தயார் செய்துள்ளார். காவல்நிலைய ஆய்வாளர் வெளியூர் சென்றிருந்த நிலையில், பொறுப்பு ஆய்வாளரிடம் குறிப்பாணையில் கையொப்பமிடுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் குறிப்பாணையில் கையெழுத்திட மறுத்துள்ளார். இந்நிலையில் பணிக்குத் திரும்பிய காவல் ஆய்வாளரிடம், சிறப்பு சார்பு -ஆய்வாளர் உள்பட 3 போலீஸாரும் முறையிட்ட போதும், சார்பு-ஆய்வாளர் விடாப்பிடியாக குறிப்பாணையில் கையொப்பம் பெற்று மூவருக்கும் வழங்கியுள்ளார். இதனால் மூவரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com