சங்க காலத்தில் குஜராத்துக்கும், ஈரோட்டுக்கும் இடையே பெருவழிப் பாதை: தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம்

சங்க காலத்தில் குஜராத்துக்கும், ஈரோட்டுக்கும் இடையே பெருவழிப்பாதை இருந்ததாக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.


சங்க காலத்தில் குஜராத்துக்கும், ஈரோட்டுக்கும் இடையே பெருவழிப்பாதை இருந்ததாக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கருத்துப்பட்டறை சார்பில் தமிழகத்தில் நகரமயமாக்கம் வரலாற்றியலும், தொல்லியலும் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் வரலாற்றுப்போக்கில் நகரங்கள் என்ற தலைப்பில் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் பேசியது: தமிழகத்தில் பழங்காலத்திலேயே நகர மயமாக்கம் இருந்துள்ளது பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. மேலும் பழங்கால நகரமயமாக்கம் குறித்து சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய கரூர், ஈரோடு பகுதிகள் பழங்காலத்தில் தகடூர் நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் தகடூர் நாட்டுக்கும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வணிகத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
2,500 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத் கட்ச் பகுதிக்கும், தற்போதைய தமிழகத்தில் உள்ள ஈரோடு, காஞ்சிபுரம் பகுதிகளுக்கும் பெருவழிப் பாதை இருந்துள்ளது.
இந்த பெருவழிப்பாதையின் நீட்சி தான் தற்போதைய நான்குவழி மற்றும் 8 வழிச்சாலைகள். இதைத் தவிர்த்து சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைக்கும் வழி என்றழைக்கப்படும் சிறிய இணைப்புச்சாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
சங்க காலத்தில் பழஞ்சியர், மணி கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு வணிக சமூகத்தினர் வசித்துள்ளனர். இவர்கள் வணிகத்துக்காக தொலைதூரங்களுக்கு செல்லும்போது வணிகர்கள் மற்றும் அவர்களது உடைமைகளை பாதுகாக்க வணிகப் படைவீரர்கள் என்றழைக்கப்படும் போர் வீரர்களும் அவர்களுடன் சென்றுள்ளனர்.
அவ்வாறு செல்லும்போது வழியில் ஏற்படும் மோதல் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நடுகல் நடப்பட்டுள்ளது.
மேலும் வணிக சமூகத்தின் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு பௌத்த, சமண, சமய கோயில்களுக்கு பல்வேறு கொடைகளை அளித்துள்ளனர். இதுதொடர்பான ஆதாரங்கள் கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளன. தகடூர் நாட்டில் வீர வெள்ளாள பட்டணம், சூரப்பட்டணம் உள்பட பல்வேறு பட்டணங்களும் இருந்துள்ளன. எனவே நகர மயமாக்கம் என்பது 10-ஆம் நூற்றாண்டு முதல் இருந்து வருகிறது. இதன் பின்புலத்தில் நகரமயமாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றார்.
முன்னதாக கருத்துப் பட்டறை அமைப்பின் நிர்வாகி பரமன் வரவேற்றார். கருத்தரங்கில் பேராசிரியர் பெ.க.பெரியசாமி ராஜா, தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன், அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள் ந.கோவிந்தராஜன், ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியை வெ.ஜெயஸ்ரீ, ஆய்வாளர் சுப.குணராஜன், மதுரைக்கல்லூரி பேராசிரியர் ந.ரத்தினக்குமார் உள்பட பலர் பங்கேற்றுப்பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com