தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு

தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பிற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் வழி தொடர் கல்வி மையம் வழியாக தமிழ் கற்பிக்க போதிய நிதி ஒதுக்கக்கோரி மதுரையை சேர்ந்த பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் பொதுச்செயலர் லட்சுமிநாராயணன் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அஞ்சல் வழி தமிழ் கல்விக்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.37 லட்சத்து 36 ஆயிரத்து 300 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை 3 மாதத்தில் தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் அஞ்சல் வழி தமிழ் கல்விக்கு தமிழ் வளர்ச்சித்துறை நிதி ஒதுக்கவில்லை. இதனால் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, லட்சுமிநாராயணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மற்றொரு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com