மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு ஏமாற்று வேலை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்

மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். 

மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார். 
    மதுரையை அடுத்த யா.ஒத்தக்கடையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:
"இதயங்களை இணைப்போம், இந்தியாவை மீட்போம்' என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு துவங்கியுள்ளது. இது முஸ்லிம் லீக் கட்சியின் முழக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவின் முழக்கமாகவும் இருக்கிறது. 
நாட்டை மீட்க வேண்டும் என்றால் ஆட்சி அதிகாரம், குறிப்பாக பிரதமர் பதவியையும் மீட்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வரும்போது தனக்கு புனித நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றார். ஆனால், அவர் அதற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். 
உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தும் மத்திய ஆட்சியாளர்களால் சரியாகச் செயல்படாமல் உள்ளன. நாட்டின் பிரதமரானவர் பத்திரிகையாளர்களைக் கூட சந்திப்பதில்லை. 
இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற பிரதமரின் வாக்குறுதி என்னவானது எனத் தெரியவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய விழா, நாடக விழா  என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அவர்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தாத மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவையெல்லாம் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஏமாற்று அறிவிப்பு. 
மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வருவதற்கும் வாய்ப்புள்ளது. மத்தியில் பாஜகவும்,  தமிழகத்தில் அதிமுகவையும் ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் தயாராக உள்ளனர் என்றார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ்: திருப்பூருக்கு அண்மையில் வந்த பிரதமர் மோடி நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறுகிறார்.  ஆனால், திருப்பூரில் இருந்த ஏராளமான தொழிற்சாலைகள் தற்போது மூடப்பட்டுவிட்டன. தமிழக வளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால், தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கவில்லை என துணை முதல்வர் கூறுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: பாஜக ஆட்சியில் 2,920 மதக் கலவரங்கள் நிகழ்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிந்தனையாளர்களையும், நல்ல விஷயங்களுக்காகப் போராடுபவர்களையும் தேசத் துரோகிகள் எனக் கூறி, பாஜக அரசு சிறையில் அடைத்து வருகிறது. இத்தகைய அரசை மத்திய ஆட்சியிலிருந்து அகற்ற ஜனநாயக சக்திகள் கைகோர்ப்பது அவசியம். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு முழுவிசாரணை அமைக்கப்பட வேண்டும். உண்மையான தேசப் பக்தர்கள் என கூறிக்கொள்கிறார்கள். அவர்களிடம் பூமாலையை கொடுத்தது போல நாட்டை கொடுத்துவிட்டோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:  நாட்டில் ஜனநாயகம் இல்லை. 5 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ள பிரதமர் மோடி, தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவப் படத்தை துப்பாக்கியால் சுடுகிறார்கள். அவர்களைக் கண்டிக்க ஆள் இல்லை.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா:ஜவாஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி,  மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்களின் சாதனைகளை பட்டியலிடலாம். ஆனால், விதவிதமாக உடையணிந்து படம் எடுப்பதுதான் பிரதமர் மோடியின் சாதனையாக உள்ளது என்றார்.

சிறுபான்மையினருக்கு எதிரானது பாஜக அரசு: கே.எம்.காதர் மொகிதீன்
மத்திய பாஜக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு  தொடர்ந்து ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.  சிறுபான்மையினர் மக்கள் தொகைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. எனவே, இந்த அரசை அகற்ற வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுகதான்  எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பானதாக இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சிப் பொறுப்புக்கு வர முழுமூச்சுடன் பணிகளைத் தொடங்க தயாராக வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com