பிளஸ் 2 வினாத்தாள் மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் புதன்கிழமை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் புதன்கிழமை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு  ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
  மதுரை மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் பிளஸ்  2 பொதுத்தேர்வை 38,541 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதே போல பிளஸ் 1 பொதுத்தேர்வை 4 கல்வி மாவட்டங்களிலும் 36,293 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.  
 இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் மையங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் கே.எம்.சி.சுபாஷினி வியாழக்கிழமை கூறியது:
 பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக மதுரை மாவட்டத்தில் 12 வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் மையங்களில் பொறுப்பாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அவற்றுக்கான மையங்களுக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் சுழற்சி முறையில்  24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்துச்செல்லும்போதும், தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை எடுத்து வரும்போதும் வாகனங்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளிலும் போலீஸார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட உள்ளனர். வினாத்தாள் மையங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்டக்கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் மையங்களில் தடையற்ற மின்சாரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com