திருப்பரங்குன்றத்தில் ரூ.8.49 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 886 பேர்களுக்கு ரூ. 8 கோடியே, 49 லட்சத்து 12 ஆயிரத்து

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 886 பேர்களுக்கு ரூ. 8 கோடியே, 49 லட்சத்து 12 ஆயிரத்து 751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா முன்னிலை வகித்தார். 
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ  பயனாளிகளுக்கு நலத்திட்ட  உதவிகள் வழங்கி பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வண்ணம் தாலிக்கு தங்கம், மகளிர் சுயஉதவிக்குழு, ஆடு ,மாடு வளர்ப்பு திட்டம் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தார். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் "கஜா' புயலை வைத்து அரசியல் செய்ய நினைத்தார். அது மக்களிடம் எடுபடவில்லை. மேலும் அமைச்சர்கள்  மீது பொது இடங்களில் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அவர் வைத்தார். ஆனால் சட்டப்பேரவையில் அதுகுறித்து அவர் பேசவில்லை. அவர் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் முதல்வர் தக்க பதிலளித்தார். மக்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்றார்.  
விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியது: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் இல்லாத நிலையிலும் மக்களுக்கான திட்டப்பணிகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரூ.100 இல் தொடங்கி வைத்த பொங்கல் பரிசுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1000 ஆக உயர்த்தினார். இதனால் மக்கள் மத்தியில் அதிமுக மற்றும் முதல்வரின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இதை பொறுக்க முடியாமல் திமுகவினர் இத் திட்டத்தை முடக்க நினைத்தனர். அதில் வெற்றி பெற முடியாததால், மக்களை திசைதிருப்பும் வண்ணம் தற்போது முதல்வர் மீது உள்நோக்கத்துடன் பழி சுமத்துகின்றனர் என்றார். 
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், கோட்டாட்சியர் அரவிந்தன், அரசு வழக்குரைஞர் எம்.ரமேஷ், கூத்தியார்குண்டு கூட்டுறவு சங்க தலைவர் நிலையூர் முருகன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் முத்துக்குமார், முனியாண்டி, வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோனாபாய், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com