அதிமுக வேட்பாளர் நிகழ்ச்சியை  புறக்கணித்த அமைச்சர்கள்: கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் புதன்கிழமை நடத்திய சிறப்பு வழிபாடு மற்றும் முக்கிய பிரமுகர்கள்

மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் புதன்கிழமை நடத்திய சிறப்பு வழிபாடு மற்றும் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அதிமுக அமைச்சர்கள் இருவர் புறக்கணித்தது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் முன்னாள் மேயரும், வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பாவின் மகனான வி.வி.ஆர்.ராஜ் சத்யன் போட்டியிடுகிறார். இதில் மதுரையில் உள்ள அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்காததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன், நரசிங்கத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயிலில் புதன்கிழமை  சிறப்பு வழிபாடு நடத்தி அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டுவது, பின்னர் மேலூர் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பது என்று நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. 
இதில் பங்கேற்க அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலில் வழிபாடு நடத்தி தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினார்.  
இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். 
 இதனால் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராஜ் சத்யன் நடத்திய சிறப்பு வழிபாடு மற்றும் பிரமுகர்கள்  சந்திப்பு, மேலூர் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தனர். 
இதனால் ராஜன் செல்லப்பா மற்றும் ராஜ் சத்யன் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக வேட்பாளரின் முதல் நாள் நிகழ்ச்சியை அமைச்சர்கள் இருவரும் புறக்கணித்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com