பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் விடுதலை

மாணவிகளை தவறான பாதைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி உயர்நீதிமன்றம்

மாணவிகளை தவறான பாதைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் அடிப்படையில் மதுரை மத்தியச் சிறையில் இருந்து 11 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு தூண்டியதாக புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். அவருடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 
இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் அடிப்படையில் முருகன், கருப்பசாமி இருவரும் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து நிர்மலாதேவி தரப்பில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஊடகங்களுக்கு பேட்டி அளிக்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிர்மலாதேவி புதன்கிழமை பிற்பகலில் மதுரை மத்தியச்சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவியை அவரது வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் அழைத்துச் சென்றார்.
அப்போது வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காவல்துறை பொய்யாக தொடர்ந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் தமிழக ஆளுநர், சந்தானம் குழுவை அமைத்தார். கொலைக் குற்றவாளிகளுக்கு கூட 60 நாள்களில் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் நிர்மலா தேவிக்கு 11 மாதங்களாக ஏன் ஜாமீன் வழங்கவில்லை என்பதை உயர்நீதிமன்றம் விசாரித்து ஜாமீனில் விடுவித்துள்ளது.  பல்வேறு இடையூறுகளையும் தாண்டி நீண்ட  போராட்டத்தின் காரணமாக நிர்மலாதேவி வெளிவந்துள்ளார்.  
நிர்மலாதேவி சிறையில் இருந்து வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன. உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் கூட அரசியல் தலையீடுகள் இருந்ததால் ஒரு 
வாரம் சிறையிலிருந்து வெளிவர முடியாமல் இருந்து, தற்போது வெளியில் வந்துள்ளார். இந்த வழக்கு 
பொய் வழக்கு என்பதை நீதிமன்றத்தில்  நிரூபிப்போம் என்றார்.
விசாரணை மார்ச் 27-க்கு ஒத்திவைப்பு: இதனிடையே இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த வழக்கை வரும் 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com