மதுரை அருகே 80 கிலோ தங்கம் பறிமுதல்: அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு

மதுரை அருகே வாகனத்தில் கொண்டு சென்ற 80 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

மதுரை அருகே வாகனத்தில் கொண்டு சென்ற 80 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். 
மக்களவைத் தேர்தலையொட்டி சட்டவிரோத பணப் பரிமாற்றம், பரிசுப்பொருள் விநியோகம் ஆகியவற்றை தடுப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை அருகே உள்ள சமயநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே பறக்கும் படை அதிகாரி விஜயா தலைமையில் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக பதிவு எண் கொண்ட வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். 
அப்போது வேனில் 80 கிலோ தங்கத்தை கொண்டு செல்வது தெரிய வந்தது. மேலும் வேனில் துப்பாக்கி ஏந்திய இரண்டு தனியார் நிறுவன பாதுகாவலர்களும் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நகைக்கடைகளுக்கு தேவையான தங்கத்தை கொண்டு செல்லும் கூரியர் நிறுவன வேன்  என்பதும் சேலத்தில் இருந்து மதுரைக்கு தங்கத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். 
ஆனால் வேனின் வழித்தடத்தில் மாறுதல் இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வேனை தகுந்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து தனியார் கூரியர் நிறுவன அதிகாரிகள் தங்கத்துக்கான ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தனர். 
மேலும் தங்கம் பிடிபட்டது தொடர்பாக வருமானவரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும், தனியார் கூரியர் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்த ஆவணங்களையும் சரிபார்த்தனர். ஆனால் விசாரணையில் அதிகாரிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலவருமான ச.நடராஜன் தங்கம் ஏற்றி வந்த வேனை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின்பேரில் வேன் மதுரை கிழக்கு கருவூலத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்கு 80 கிலோ தங்கம்  ஒப்படைக்கப்பட்டது. மேலும் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து தங்கத்தை பெற்றுக் கொள்ளுமாறு தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com