தேனி மக்களவைத் தொகுதியில் மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்பேன்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி

தேனி மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விவசாயம், மக்களை பாதிக்கும் நியூட்ரினோ உள்ளிட்ட

தேனி மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் விவசாயம், மக்களை பாதிக்கும் நியூட்ரினோ உள்ளிட்ட எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை நான் எதிர்ப்பேன் என தேனி மக்களவை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.   
சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மக்களவை தொகுதியை பொருத்தவரை பெரிய போட்டி இருப்பதாக கருதவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை மக்கள் அதிமுக, பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க முடிவெடுத்துள்ளார்கள். ஆகவே தேனி தொகுதியில் நான் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவேன்.  
 எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பானது இறுக்கமானது. அதனால் தமிழகத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி மற்றும் திமுக தலைவர்களை சந்தித்துவிட்டு அவர்களிடம் நேரம் கேட்டு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.  என் அருமை தம்பி ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை அதிமுக வேட்பாளருமானரவீந்திரநாத்குமார் எனக்கு தேனி மக்களையும் அங்கு நடக்கும் பஞ்சாயத்துக்களை பற்றியும் எதுவுமே தெரியாது என்று விமர்சித்துள்ளார். 
எனக்கு பஞ்சாயத்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் கட்டப் பஞ்சாயத்துக்கு நான் வரமாட்டேன். தொகுதியில் மக்கள் பிரச்னைகள் பல உள்ளன. வைகையில் தூர்வாரும் பிரச்னை, முல்லை பெரியாறு, நியூட்ரினோ பிரச்னை உள்ளது. அது மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தை சுற்றுலா மையமாக  மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இதுபோன்ற காரியங்களில் தான் நான் ஈடுபடுவேனே தவிர மற்ற எந்தவித பஞ்சாயத்திலும் ஈடுபடமாட்டேன்.
  தேனி மக்களவை தொகுதி மக்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட மிக சிறப்பாக செய்வேன்.  நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் சரி, வேறு பல மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும் சரி மக்களுக்கு பாதிப்பாக இருக்கும், விவசாய நிலங்கள் பாதிப்படையும் திட்டமாக இருந்தாலும் சரி அவற்றை தடுப்பேன் என்றார்.
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திமுக நகர செயலர் தங்கமலைப்பாண்டி, காங்கிரஸ் நகரத் தலைவர் சசிவர்ணத்தேவன், மாநில செயற்குழு உறுப்பினர் பிரேம்சந்தர், வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com