பறிமுதல் செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர்களின் ரூ.2.43 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.43 லட்சத்தை

மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதற்காக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.43 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உடனடியாக திரும்ப வழங்க, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் ஹோட்டலில் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர், பால் உற்பத்தியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
கருமாத்தூர், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், எழுமலை, வேப்பம்பட்டி உள்ளிட்ட 20 பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மதுரை பிடிஆர் பால் பண்ணைக்கு வாகனத்தில் பால் அனுப்பி வருகிறோம். கடந்த மார்ச் 22 ஆம் தேதி நாங்கள் அனுப்பிய பாலுக்கு, பிடிஆர் பால் பண்ணையில் இருந்து வழங்கப்பட வேண்டிய தொகை, பால் வாகனத்தில் வழக்கம்போல் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது, காமராஜர் பல்கலைக்கழகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், பால் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2,43,334 ரூபாயை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். 
இந்தப் பணமானது, பால் உற்பத்தியாளர்கள் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட வேண்டிய தொகையாகும். இந்த வருமானத்தைக் கொண்டு, எங்களது அன்றாட வாழ்வாதாரத்துக்கும், மாடுகளுக்கு தீவனம் வாங்கவும் பயன்படுத்தி வருகிறோம். இந்த பணம் கிடைக்கவில்லை என்றால் எங்களது தொழிலை தொடர முடியாது. 
எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உடனடியாக திரும்ப வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிமேல், தேர்தல் முடியும் வரை பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கான தொகையை தனித்தனியாக பண்ணைக்குச் சென்று பெற்றுக்கொள்கிறோம் என்றனர்.
இதையடுத்து, பிடிஆர் பால்பண்ணை உரிமையாளர் மற்றும் 10 பால் முகவர்கள் தலைமையில் பால் உற்பத்தியாளர்கள், ஆட்சியர் ச. நடராஜனிடம் மனு அளித்தனர். 
அதன்பேரில், பால் அனுப்பியவர்களின் விவரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை குறித்த விவரங்களை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர். அதன்பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2 லட்சத்து 43 ஆயிரத்து 334 பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com