மாவட்ட அரசு மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு தொடக்கம்

 ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பட்டமேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.


 ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பட்டமேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவத்துறை பட்ட மேற்படிப்புகள் கற்பிக்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக நடப்பாண்டிலிருந்து பட்டமேற்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பட்டமேற்படிப்பு கடந்த ஜூலை முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை என்பதால் பட்டமேற்படிப்பில் ஓரிடம் வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ளது. வரும் ஆண்டிலிருந்து அவசர மருத்துவம், பிரசவ சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை ஆகியவற்றுக்கும் பட்டமேற்படிப்புக்கு அனுமதி கோரியிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவப் பட்ட மேற்படிப்புக்குரிய உள்கட்டமைப்புகள், திறன்மிக்க பேராசிரியர்கள் இருப்பதாலேயே ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஓரிடம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கண்காணிப்பாளர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மருத்துவ அறுவைச் சிகிச்சை பட்டமேற்படிப்பு மாணவருக்கான செயல்முறைப் பயிற்சி வகுப்புகள் மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெறுவதாக மூத்த மருத்துவர்கள் கூறினர்.
ராமநாதபுரம் போலவே, விருதுநகர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com