ராமநாதபுரத்தில் கடல் தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்: மீனவர் குறைதீர் முகாம் நடத்த ஆட்சியர் ஒப்புதல்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியூ) காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடல் தொழிலாளர் சங்கத்தினர் (சிஐடியூ) காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
      ராமநாதபுரம் மாவட்டம் கீழமுந்தல், மேலமுந்தல் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி கடல்கரையோரம் விசைப்படகுகள் மீன்பிடிப்பதைக் கண்டித்தும், அதை தடைசெய்யக் கோரியும், மீனவர் குறைதீர்க்கும் முகாம் நடத்தக் கோரியும்  ராமநாதபுரம் மாவட்ட கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஏற்கெனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. 
  இந்த நிலையில், திங்கள்கிழமை  ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் இருந்து சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.கருணாமூர்த்தி தலைமையில் நடைப்பயணம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி மற்றும் சிஐடியூ மாவட்டச் செயலர் சிவாஜி, மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் கே.முனியாண்டி, மீனவர் மகளிர் கூட்டமைப்பு (சிஐடியூ) நிர்வாகி ஆரோக்கிய நிர்மலா, நாட்டுப்படகு மீனவர்கள் ஆகியோர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.    பேரணியானது, ராமநாதபுரம்- ராமேசுவரம் சாலை வழியாக ஆட்சியர் அலுவலக வளாகத்தை அடைந்ததும், அங்கு காத்திருப்புப் போராட்டத்தை தொடங்குவதாக சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து ஆட்சியர் கொ.வீரராகவராவ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார். 
 அதன்படி முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எம்.கருணாமூர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியரைச் சந்தித்துப் பேசினர். அப்போது, வரும் 27 ஆம் தேதி மீனவர் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுவதாக ஆட்சியர் உறுதியளித்தார். மேலும், விசைப்படகுகள் கடலோரத்தில் மீன்பிடிப்பதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறினார். இதையடுத்து காத்திருப்புப் போராட்டத்தை கைவிடுவதாக கடல் சார் தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறினர். 
  மனுக்கள் வழங்கல்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தேவேந்திர குல வேளாளர் இன மக்களை அதே பெயரில் அழைக்க அரசு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கூறி ஆட்சியரிடம் மனுக்கொடுத்தனர்.  கீழவலசை கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா என்பர் கிராமத்தில் நிர்வாக கணக்கை கேட்டதால், தன்னையும், தனது குடும்பத்தினரையும் கிராமத்தினர் ஒதுக்கிவைத்திருப்பதாகவும், இதனால், அத்தியாவசியப் பொருள்களைக் கூட கிராமத்தில் வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com