"கஜா' புயல் மீட்புப் பணிக்கு 5 ஆயிரம் பேர் தயார்: ஆட்சியர் தகவல்

"கஜா' புயல் கரையை கடப்பதையொட்டி, பேரிடர் மீட்பு பணிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர்

"கஜா' புயல் கரையை கடப்பதையொட்டி, பேரிடர் மீட்பு பணிக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள "கஜா' புயல் நவ.15 அன்று கடலூர்- பாம்பன் கடல் பகுதி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் வந்தனர். இங்குள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தங்கியிருந்த அவர்களை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
மாவட்டத்தில் கஜா புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவில் ஒரு டி.எஸ்.பி., ஒரு ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 22 வீரர்கள் உள்ளனர். இவர்களைத் தவிர மருத்துவர், மருந்தாளுநர் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினரிடம் மரங்களை அறுக்கும் நவீன இயந்திரங்கள், பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் படகுகள், ஸ்கூபா டைவர்கள் எனப்படும் கடலுக்கு அடியில் நீந்துபவர்கள் ஆகியோரும் உள்ளனர்.
 கால்நடைகளை பாதுகாக்க 113 பேர், பாம்புகளை பிடிப்பவர்கள் 21 பேர் ஆகியோரும் உள்ளனர். 
45 ஆயிரம் மணல் மூட்டைகளும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் முதல்நிலை மீட்புக்குழுவினர் தயாராக உள்ளனர். காவல்துறை சார்பிலும் பேரிடர் மீட்புக்குழு உருவாக்கப்பட்டு பயிற்சி பெற்ற வீரர்கள் ஒரு குழுவுக்கு 40 பேர் வீதம் 80 பேர் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.
ராமேசுவரத்தில்: கஜா புயல் முன்னெச்சரிக்கையாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, மீன்பிடி துறைமுகங்கள், மழையால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து புயல் கரையை கடக்கும் போது, அனைத்துத் துறை அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
திருவாடானையில்:  கஜா புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம், டிராக்டர்கள், லாரிகள், ஜெனரேட்டர், மணல் மூட்டைகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
மேலும், 24 மணி நேரமும் மீட்புப் பணிக்காக பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அப்போது, துணை வட்டாட்சியர் பழனிநாதன், மேலாளர் ரவி, ஊராட்சி செயலாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com