குண்டுக்கரை, குன்றக்குடி கோயில்களில் சூரசம்ஹாரம்

கந்தசஷ்டி விழாவையொட்டி, ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலிலும், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி

கந்தசஷ்டி விழாவையொட்டி, ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலிலும், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலிலும் செவ்வாய்க்கிழமை மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
 ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கடந்த 8 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் ஆன்மிகச் சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை கோயில் முன், அர்ச்சகர் வையாபுரி உற்சவர் முருகப்பெருமானிடமிருந்து வேலை வாங்கி வந்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பட்டிமன்ற நடுவர் ஆர்.வாசு தலைமையில் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடந்தது. புதன்கிழமை காலையில் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் சு.கணேசன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில்: ராமநாதபுரம் நகர் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டியையொட்டி, செவ்வாய்க்கிழமை உற்சவ மூர்த்தி தங்கக்குதிரை வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக ராஜா மேல்நிலைப்பள்ளி அருகே வந்தடைந்தார். பின்னர், அங்கு அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அசுரன் சேவலாகவும், மயிலாகவும் மாறும் நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் நடந்தன.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான திவான் வி.கே.பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் எம்.ராமு, தமிழ்ச்சங்க மகளிர் அணி தலைவி டாக்டர். மதுரம் அரவிந்தராஜ், துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவின் தலைவர் எம்.காந்தி, செயலாளர் எஸ்.நாகராஜன், பொருளாளர் ஆடிட்டர் லோகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
குன்றக்குடியில்: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முக நாதப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை வேளைகளில் அறுமுகச்செவ்வேள் எழுந்தருளலும், சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் போன்ற அவதாரங்களில் சூரன் எதிரெழுந்து வருதலும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரத்தன்று மாலையில் அறுமுகச்செவ்வேள் அம்மையிடம் சக்திவேல் பெற்று வெள்ளிரதத்தில் எழுந்தருளினார். மேலும் விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும் பாலசுப்பிரமணியர் யானை வாகனத்திலும், முத்துக்கந்தர் வெள்ளி மயில்வாகனத்திலும், வீரபாகுதேவர் குதிரை வாகனத்திலும், தண்டாயுதபாணி ஆட்டுக்கிடா வாகனத்திலும் எழுந்தருளினர். மாலையில் நான்கு ரத வீதிகளில் சுவாமியை சூரன் எதிர்கொள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அறுமுகச்செவ்வேள் சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் குன்றக்குடி ஆதீனத்தலைவர் பொன்னம்பல அடிகளார் முன்னிலை வகித்தார். சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com