ரெகுநாதபுரத்தில் அரசு கேபிள் டி.வி. சிக்னல் துண்டிப்புஆட்சியரிடம் ஆபரேட்டர்கள் புகார்

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் அரசு கேபிள் டி.வி. சிக்னலை துண்டித்து பணம் கேட்டு மிரட்டுபவர்

ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் அரசு கேபிள் டி.வி. சிக்னலை துண்டித்து பணம் கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவிடம் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.
 ராமநாதபுரம்  மாவட்டம்  திருப்புல்லாணி  ஊராட்சி  ஒன்றியத்துக்கு  உள்பட்ட  ரெகுநாதபுரத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பா.மணிகண்டன் என்பவர்  தலைமையில் ஆட்சியரை  நேரில்  சந்தித்து கொடுத்துள்ள  மனு விவரம்:
ரெகுநாதபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக கேபிள் டி.வி. தொழில் நடத்தி வருகிறோம். அரசு கேபிள் டி.வி. உருவானதிலிருந்து அரசிடம் சிக்னல் பெற்று முறையாக தொழில் செய்து வருகிறோம். கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமான பிறகு செட்டாப் பாக்ஸ் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பொருத்தி தொழில் செய்து வருகிறோம். 
இந்த நிலையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயபாரத் என்பவர் கேபிள் டி.வி. நிறுவன துணை மேலாளர் மற்றும் தனி வட்டாட்சியர் உதவியுடன் செயல்படுவதால் அவருக்கு மாதம் தோறும் ரூ.8  ஆயிரம் செலுத்தி வந்தோம். தற்போது,  அவர் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டி வருகிறார். நாங்கள் செலுத்த முடியாது என்றதால் அரசு கேபிள் டி.வி. சிக்னலை துண்டித்து விட்டார். இது குறித்து திருப்புல்லாணி 
காவல் நிலையத்தில் புகார் செய்தும் அவர் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
மேலும், ரெகுநாதபுரத்தில் நாங்கள் ஏற்கெனவே அமைத்திருந்த கேபிள்  டி.வி. வயர்களையும் அதிகாரிகளின் துணையுடன் துண்டித்து  செயல்படவிடாமல் தடுத்துள்ளார்.
இது  குறித்து கேபிள் டி.வி.  தனி  வட்டாட்சியரிடமும்  பலமுறை  மனு செய்தும்  பலனில்லை. எனவே  ரெகுநாதபுரம் பகுதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின்  நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. சிக்னலை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com