ஊருணியில் கிணறு அமைத்து தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிய கிராமத்தினர்

கமுதி அருகே செங்கோட்டைப்பட்டியில் கிராம நிதியில் ஊருணிக்குள் கிணறு அமைத்து, கிராம மக்கள் தட்டுப்பாடின்றி குடிநீர் பெற்று வருகின்றனர்.

கமுதி அருகே செங்கோட்டைப்பட்டியில் கிராம நிதியில் ஊருணிக்குள் கிணறு அமைத்து, கிராம மக்கள் தட்டுப்பாடின்றி குடிநீர் பெற்று வருகின்றனர்.
     கமுதி பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க 1998 இல் ரூ.55 கோடி மதிப்பில் நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைபோக்க 2011 இல்  ரூ.616 கோடி மதிப்பில் காவிரி குடிநீர்த் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த திட்டங்களால் கிராமப்புறங்களுக்கு குடிநீர் சீராக விநியோகிக்க முடியவில்லை. 
    சீரமைப்பு பணிகள் முறையாக இல்லாததால், ஆங்காங்கே குழாய்கள் சேதமடைந்து, சாலையோரங்கள், வயல்வெளிகளில் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், குடிநீருக்காக கமுதி குண்டாற்றிலிருந்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. 
     இந்நிலையில், கமுதி அடுத்துள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தினர் நிரந்தரமாக குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க, கிராம நிதியிலிருந்து காளியம்மன் கோயில் ஊருணியில் மழைநீரை தேக்கி, ரூ.6 லட்சம்ய் மதிப்பில் கிணறு அமைத்தனர். இந்தக் கிணற்றைச் சுற்றிலும் மணல் குவித்து சுத்தமான குடிநீரையும் பெற்று வருகின்றனர்.
    இது குறித்து முன்னாள் கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் கூறியது: கிராம மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டை நிரந்தரமாக தீர்க்கும் வகையில், 2011 இல் கிராமத்துக்கு நடுவே அமைந்துள்ள கோயில் ஊருணியில் கிணறு அமைத்து,  ஊருணிக்கு செங்கோட்டைபட்டி பெரிய கண்மாயிலிருந்து நிரந்தரமான தண்ணீர் வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கிணற்றில் எந்நேரமும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்து, பொதுமக்களின் குடிநீர்  தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com