மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு காவல் ஆய்வாளர் பேரம் பேசினாரா? விசாரணைக்கு எஸ்.பி.  உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு, பேரம் பேசும்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு, பேரம் பேசும் ஆடியோ கட்செவி அஞ்சலில் பரவி வருவது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவுக்கு உள்பட்ட தத்தங்குடி கண்மாயில் குடிமராமத்து என்ற பெயரில் கண்மாயில் பல இடங்களில் மிக ஆழமாக தோண்டி முறைகேடாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக பரமக்குடி சார் ஆட்சியர் ப.விஷ்ணுசந்திரனுக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன.
 அதைத்தொடர்ந்து, சிக்கல் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கண்ணன் ஆகியோர் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு, சார் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், பரமக்குடி சார் ஆட்சியர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மணல் கொள்ளையை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
 இதேபோல், சார் ஆட்சியர் ப.விஷ்ணுசந்திரனும் தத்தங்குடி கண்மாயில் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது பல இடங்களில் விதிமுறைகளை  மீறி  மணல் அள்ளப்பட்டது தெரியவந்தது. ஆய்வின்போதே மணல் கடத்தல் கும்பலால் போடப்பட்டிருந்த குடிசைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. 
 இந்நிலையில் சிக்கல் காவல் ஆய்வாளர் முகம்மது நசீர், தத்தங்குடி கண்மாயில் மணல் அள்ளும் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் உரையாடல் கட்செவி அஞ்சல் மூலம் கடந்த 2 நாள்களாக பரவி வருகிறது.
 அந்த உரையாடலில் அப்பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், மணல் கடத்தல் புரோக்கராக செயல்பட்டதும், காவல் ஆய்வாளர் பேரம் பேசுவது போன்ற தகவல்களும் வெளியாகின. 
 இது குறித்து பரமக்குடி சார் ஆட்சியர் ப.விஷ்ணுசந்திரன் கூறியது:
 மணல் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்து பேரம் பேசிய சிக்கல் காவல் ஆய்வாளர் மீதான புகார் குறித்து தென்மண்டல ஐ.ஜி.யிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் தெரிவிக்கப்படும் என்றார்.
 ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறியது:
 மணல் கொள்ளை கும்பலுடன், சிக்கல் காவல் ஆய்வாளர் முகம்மது நசீர் பேரம் பேசியது குறித்து விசாரணை நடத்துமாறு கீழக்கரை டி.எஸ்.பி. (பொறுப்பு) எஸ். நடராஜனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை தெரிந்த பின்னர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com