7 லட்சம் லிட்டர் குறைப்பு; குழாய் உடைப்பு: ராமநாதபுரத்தில் குடிநீர் விநியோகம் கடும் பாதிப்பு

ராமநாதபுரம் நகராட்சியில் 7 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைப்பு, குழாய் பழுதால் கூட்டுக்குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் நகராட்சியில் 7 லட்சம் லிட்டர் தண்ணீர் குறைப்பு, குழாய் பழுதால் கூட்டுக்குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 65 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். பரமக்குடி பொட்டிதட்டி பகுதியிலிருந்து நகராட்சிக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது நகராட்சிக்குப் போதவில்லை என்பதால் கடந்த 2011 ஆம் ஆண்டில் திருச்சி நங்கநல்லூர் பகுதி காவிரியிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் குழாய் மூலம் ராமநாதபுரத்துக்கு குடிநீர் கொண்டுவரப்படுகிறது.
இந்த தண்ணீர் கீழ்நிலைத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து நொச்சிவயல் ஊருணி-முகவை ஊருணி மேல்நிலைத் தொட்டி, லேத்தம்ஸ் மேல்நிலைத் தொட்டி, பேருந்து நிலைய மேல்நிலைத் தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு நகராட்சி முழுதும் தினமும் சுமார் 33 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.     இந்தநிலையில், கடந்த 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நகருக்கு வரும் காவிரி குடிநீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருந்த குடிநீரை விநியோகித்ததால் பெரும் பாதிப்பில்லை. 
   இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென வழக்கமாக வரும் குடிநீர் அளவில் 7 லட்சம் லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நொச்சிவயல் ஊருணி, முகவை ஊருணி பகுதி மேல்நிலைத் தொட்டிக்குச் செல்லும் குழாயில் வண்டிக்காரத் தெருவில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மேல்நிலைத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்படவில்லை. அந்த தொட்டியின் மூலம் குடிநீர் வசதி பெறும் கோட்டைமேடு, கூரிகாத்த அய்யனார் கோவில் பகுதி, மூலக்கொத்தமங்கள சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்கும் பிற தேவைகளுக்கும் மக்கள் பணம் செலவழித்து தண்ணீர் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   தினமும் சுமார் ரூ.500 செலவழித்தே தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
  மேலும், வழக்கமாக குழாயில் வரும் 33 லட்சம் லிட்டர் தண்ணீர் அளவானது 26 லட்சமாக குறைக்கப்பட்டதால் அழுத்தம் குறைந்து பல பகுதிகளுக்கும் குடிநீர் செல்வது தடைபடுவதாக புகார் எழுந்துள்ளது. குழாயில் குடிநீர் அளவு குறைந்த நிலையில், உணவு விடுதி, வர்த்தக மையங்களில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் அளவு மிகமிக குறைந்துவிட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். 
   இதுகுறித்து நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியது:   வண்டிக்காரத் தெருவில் ஏற்பட்ட குழாய் உடைப்பால் நொச்சிவயல் ஊருணி பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குழாய் உடைப்பு சீராக்கப்பட்டு ஓரிரு நாளில் குடிநீர் விநியோகிக்கப்படும். குழாய் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com