ஆழ்கடல் மீன் பிடி திட்டம்: முதல்முறையாக 4 படகுகள் வெள்ளோட்டம்

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட

ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 4  படகுகள் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை  வெள்ளோட்டம் விடப்பட்டன. 
 மிகக்குறைந்த தொலைவில் சர்வதேச கடல் எல்லை உள்ள கடலோர மாவட்ட மீனவர்களுக்கு உதவும் வகையில் ஆழ்கடல் மீன் பிடி படகு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து வளைகுடா பகுதி மீனவர்களை ஆழ்கடலில் மீன் பிடிக்க வைக்கும் வகையில் கடந்த 2018 ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தை அறிமுகம் செய்தன. அதற்காக தலா ரூ.81.05 லட்சத்தில் படகுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம் என 70 சதவீதம் மானியம் வழங்குகின்றன. மேலும் 30 சதவிகித வங்கிக்கடன் மூலமாக மீனவர்களுக்கு படகுகள் அமைக்கப்படுகின்றன. 
 இத்திட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரம் மீனவர்களுக்கு படகுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக  படகுகள் கட்ட  300 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன.இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆனந்தபைவா, ஷேக்இருதயம், வின்னரசன், ரெஜில் ஆகிய நான்கு மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான வெள்ளோட்டம் கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. வெள்ளோட்டத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  தொடங்கிவைத்தார். 
 இந்தநிகழ்ச்சியில் தமிழக மீன்வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் ஜானிடோம்வர்கீஸ், துணை இயக்குநர் காத்தவராயன்,  கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் இயக்குநர் மதுநாயர் மற்றும் தங்கச்சிமடம் மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொச்சியில் வெள்ளோட்டம் விடப்பட்ட படகுகள் அங்கிருந்து பத்து நாள்களில் ராமேசுவரம் பகுதிக்கு கொண்டுவரப்படும் என மீன் வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com