கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா: பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கான பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்,

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கான பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
     புனித அந்தோணியார் ஆலயத்தில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் திருவிழாவுக்கு, ராமேசுவரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் செல்கின்றனர். எனவே, கச்சத்தீவு செல்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
     இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்தார். இதில், சவேரியார் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சகாயம்,  கச்சத்தீவு செல்லும் தமிழக மீனவர்களுக்கு காவல் துறையின் தடையில்லாச் சான்று பெற அறிவுறுத்துவது தேவையில்லாத செலவை ஏற்படுத்துகிறது என்றார்.
     பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கான பாதுகாப்பு, அடிப்படைத் தேவைகள் குறித்து அனைத்துத் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், படகுகளில் செல்ல வசூலிக்கப்படும் கட்டணம் மற்றும் நாட்டுப் படகுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
    ஒரு படகில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். படகுகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்த பின்னரே அனுமதி அளிக்கப்படும். கச்சத்தீவு செல்ல இதுவரை 2,200 பேர் பதிவு செய்துள்ளனர் என்றார். 
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சார்-ஆட்சியர் விஷ்ணுவர்த்தன், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்மீனா,  மீன்வளர்ச்சித் துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் கோபிநாத் (மண்டபம்), யுவராஜ் (ராமேசுவரம்), ஜெயகுமார், கிலானி (ராமநாதபுரம்) மற்றும் வேர்கோடு புனித ஜோசப் ஆலய பங்குத்தந்தை தேவசகாயம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com