குடியிருப்பு பகுதியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்கள்! விழிப்புணர்வு இன்மையால் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

ராமநாதபுரம் நகராட்சியில் அந்தந்த குடியிருப்புப் பகுதிகளில் சேரும் மக்கும் குப்பைகளில் இருந்து உரம்

ராமநாதபுரம் நகராட்சியில் அந்தந்த குடியிருப்புப் பகுதிகளில் சேரும் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் ரூ.2.25 கோடியில் 4 இடங்களில் அமைக்கப்படவுள்ளன. இது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 65 ஆயிரமாகும். நகராட்சியில் மொத்தம் 18,724 வீடுகளும், 5 ஆயிரம் வர்த்தக நிறுவனங்களும்  உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டில் நகராட்சிக்கு தினமும் 24 டன் குப்பைகள் சேர்ந்துள்ளன. 
அதில் மக்கும் தன்மையுடைய குப்பைகள் 18 டன் அளவுக்கு இருந்துள்ளன. தற்போது தினமும் 28 டன் குப்பைகள் சேருகின்றன. இதில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் 15 டன் ஆகும். ஆண்டுதோறும்  நகராட்சியில் சேரும் குப்பை அளவு அதிகரித்துள்ளது.  
நகரில் சேரும் குப்பைகள் அல்லி ஊருணி சுடுகாடு பகுதியில் குவிக்கப்பட்டுவந்தன. அங்கு சுற்றுச்சூழலுக்கு குப்பைகளால் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுவருகின்றன. 
பல ஏக்கரில் குவிந்திருக்கும் இக்குப்பையால் கிழக்கு கடற்கரைச்சாலை மற்றும் பட்டணம்காத்தான் விரிவாக்கப்பகுதிகளில் சுகாதாரச்சீர்கேடு ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.
இந்தநிலையில்தான், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேசிய அளவில் தூய்மை பாரத திட்டத்தின்படி நகராட்சி, மாநகராட்சிகளில் அந்தந்த பகுதி குப்பைகளை அங்கேயே உரமாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
அதனடிப்படையில், ராமநாதபுரத்தில் பாத்திமா நகர் (6 ஆவது வார்டு), சாயக்காரஊருணி (12 ஆவது வார்டு), பெரியார் நகர் (32 ஆவது வார்டு), வனசங்கரி அம்மன் கோயில் (29 ஆவது வார்டு) ஆகிய இடங்களில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. பாத்திமா நகர், பெரியார் நகர் ஆகியவற்றில் தலா  ரூ.62 லட்சத்திலும், சாயக்கார ஊருணி, வனசங்கரி அம்மன் கோயில் பகுதியில் தலா ரூ.52.50 லட்சத்திலும் மையங்கள் அமைகின்றன. இங்கு சுற்றுச்சுவர், மக்கும் தன்மையுடைய குப்பைகளை உரமாக்கி உலர்த்தும் சாதனங்கள் அமைக்கப்படவுள்ளன.
  மக்கும் குப்பைகளை உரமாக்கும் மையம் அமைய பாத்திமா நகர் பகுதியில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து  சமீபத்தில் போராட்டம் நடத்தினர். மையத்துக்கான கட்டடப்பணி தொடங்கிய நிலையில், அதை இடித்தும் எதிர்ப்பைக் காட்டினர்.  மையம் அமைவதால் நிலத்தடி நீர் மாசுபடும், காற்றில் குப்பைக் கழிவு துர்நாற்றம் வீசும்,  தொற்றுநோய்  பரவும் என்பதே மக்கள் கருத்து. 
 இதுகுறித்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறியது: மக்கும் தன்மையுடைய குப்பை தயாரிப்பில் கழிவுகள் வெளியேற வாய்ப்பே இல்லை. அவை நொதித்தன்மை அடிப்படையிலே குப்பைகளாக்கப்பட்டு இயந்திரத்தில் உலர்த்தப்பட்டு, விற்கப்படவுள்ளன. குப்பைகள் துர்நாற்றம் வீசாத வகையிலே  சேகரிக்கப்படும் என்கின்றனர். 
 திருச்சி, மதுரை போன்ற மாநகராட்சிகளிலும், தேவகோட்டை போன்ற நகராட்சிகளிலும் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் பிரச்னையின்றி செயல்பட்டு வருவதை நகராட்சி பொறியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், இதுகுறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தாதாலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக வர்த்தகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஆதங்கப்படுகின்றனர். 
நகரின் எதிர்கால நன்மைக்காக செயல்படுத்தும் இதுபோன்ற திட்டத்தை மக்களிடையே விளக்க போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கருத்து. 

மக்காத குப்பையிலிருந்து டீசல்!
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது குறித்து  உதவிப் பொறியாளர் பிரபு கூறியது: கடந்த 2011 ஆம் ஆண்டில் பாதாள சாக்கடைத் திட்டம் வந்தபோது, இது போல சில இடங்களில் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், தற்போது 10,300 கட்டடங்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நகரில் வெளியில் எங்கும் கழிவு நீர் தேக்கமில்லை. ஆகவே, குப்பை சேகரித்து உரம் தயாரிப்பதும் நகருக்கு நன்மை பயக்கும் திட்டமாகும். மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் அதே நேரத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற மக்காத குப்பைகளில் இருந்து டீசல் தயாரிக்க ரூ.9.50 லட்சத்தில் அமைந்துள்ள புதிய மையம் விரைவில் செயல்படவுள்ளது. மேலும், சில மக்காத பொருள்களை காளையார்கோவில் பகுதியில் உள்ள மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்துக்கும் அனுப்ப உள்ளோம்.
 பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் மலைபோல குவிந்த குப்பைகளை குறைக்க தற்போது அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com