மறவமங்கலம் பெரியாறு பாசன கால்வாயை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் வரை நீட்டிப்பு செய்யப்பட்ட பெரியாறு பாசனக் கால்வாயை

சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் வரை நீட்டிப்பு செய்யப்பட்ட பெரியாறு பாசனக் கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட விவசாயத்துக்காக பெரியாறு- வைகை பாசன விரிவாக்க கால்வாய் திட்டம் மூலம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே காஞ்சிரம்பட்டி விலக்கில் இருந்து சிங்கம்புணரி, திருப்பத்தூருக்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இதேபோல், திருவாதவூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் தமறாக்கி, குமாரப்பட்டி, அரசனூர், நல்லாகுளம், மாத்தூர் வரையும், தமறாக்கியில் இருந்து வி.மலம்பட்டி, கூட்டுறவுப்பட்டி, உசிலம்பட்டி, இடையமேலூர், காஞ்சிரங்கால், சூரக்குளம், செம்பனூர், பொட்டகவயல் வழியாக மறவமங்கலம் வரை கால்வாய்கள் அமைக்கப்பட்டன. பெரியாறு மற்றும் வைகை அணைகள் முழுக் கொள்ளளவை எட்டினால் இக்கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
இதில், மறவமங்கலம் வரை விரிவாக்கம் செய்யப்பட்ட கால்வாய் மூலம் மட்டுமே சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் மறவமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால், கால்வாய்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்தும், மண் திட்டுகளால் மூடப்பட்டும் உள்ளன. இவை தவிர, சில இடங்களில் கால்வாய்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் கற்களை அள்ளிச் சென்று விட்டனர். இதனால், கால்வாய்கள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு, மழைக் காலங்களில் வரும் உபரிநீர் கூட வீணாகின்றன.
எனவே, மறவமங்கலம் வரை உள்ள பெரியாறு பாசனக் கால்வாயை தூர்வார சிவகங்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொட்டகவயலைச் சேர்ந்த விவசாயி வேலுச்சாமி கூறியது:
பருவமழை பொய்த்ததால் மறவமங்கலம் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்து பல ஆண்டுகளாகின்றன. தற்போது கால்வாய்கள் உருக்குலைந்துள்ளன. கடந்த புரட்டாசி மாதம் பெய்த மழையைக் கொண்டு நெல் விதைத்தோம். விதைப்பு பணி நிறைவடைந்து ஒரு மாதத்தில் மழை சரிவர பெய்யவில்லை. இதனால் போதிய தண்ணீரின்றி பயிர்கள் ஆரம்ப நிலையிலேயே கருகின.
உழவு செய்தல், விதைத்தல், களை எடுத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல் என ஒரு ஏக்கருக்கு  ரூ. 18 ஆயிரம் வரை 
செலவாகிறது. போதிய நீர் இல்லாததால், பயிர்கள் கருகி மேய்ச்சல் நிலமாக மாறி விட்டது. எனவே, விவசாயத்தை காக்க, மறவமங்கலம் பெரியாறு பாசனக் கால்வாயை தூர்வாரி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com