சிங்கம்புணரியில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்க இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்க இடைக்காலத் தடை விதித்து

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சிங்கம்புணரியைச் சேர்ந்த எல்.ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: சிங்கம்புணரியின் சின்னசெங்குண்டு கிராமத்தின் 10, 12 ஆவது வார்டுகளில் தனியார் நிறுவன செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சால் பொதுமக்களுக்கு புற்றுநோய், மூளை, இதயம் தொடர்பான நோய்கள் வரும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி கோபுரங்களை நிறுவுவதற்கு உச்சநீதிமன்றம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி பள்ளி, மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கக்கூடாது. செல்லிடப்பேசி கோபுரங்கள் அமையும் கட்டடத்திற்கும் மற்ற கட்டடங்களுக்கும் மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
 ஆனால், இந்த செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைய உள்ள இடத்தின் அருகே 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனவே பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சிங்கம்புணரியின் 10, 12ஆவது வார்டுகளில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்கம்புணரியின் 10, 12 ஆவது வார்டுகளில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். 
மேலும், இதுதொடர்பாக சிவகங்கை நகராட்சி ஆணையர், சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com