சிவகங்கை

"கஜா' புயல்: காரைக்குடி பகுதியில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன

DIN

கஜா புயல் காரணமாக வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின் கம்பங்கள் முறிந்தும் விழுந்தன.
   இப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதலே லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் புயல் கரையைக் கடந்த போது வெள்ளிக்கிழமை அதிகாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் காரைக்குடி நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் சாலையில் உள்ள கம்பன் மணி மண்டபம் முன் இருந்த ஒரு மரமும், காரைக்குடி வருமான வரி அலுவலக வளாகத்தில் முன்பகுதியிலிருந்த மரமும் வேரோடு சாய்ந்தன. மேலும் சுப்பிரமணியபுரம் ப.சிதம்பரம் எம்.பி அலுவலகச்சாலையிலும், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட மேலும் 2 வீதிகளிலும் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. பெரியார் நகர், பர்மா காலனி, பாரி நகர், அழகப்பா பல்கலைக்கழக உடற் கல்வியியல் துறை வளாகங்களில் இருந்த மரங்களும், புதுயல், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் பகுதிகளில் இருந்த மரங்களும் வேரோடு முறிந்து விழுந்தன.
முறிந்து விழுந்த மரம், மின்கம்பங்கள்: காரைக்குடி பர்மா காலனி பெட்ரோல் நிலையம் அருகே மின்கம்பம் முறிந்து விழுந்தது. கோட்டையூர் ஸ்ரீராம்நகர் பகுதியில் மின்கம்பம் மற்றும் மின்மாற்றியும் பழுதடைந்தன. கானாடுகாத்தான் பகுதியில் பள்ளிக்கூடம் உள்ள சாலையில் மின்கம்பம் தரையில் சாய்ந்தது. இதனால் பல மணிநேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது. அதே போல் காரைக்குடி நகர் பகுதியில் அதிகாலையிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
 இதுகுறித்து மின்வாரிய பொறியாளர்கள் கூறும் போது, பல இடங்களிலும் மின்கம்பங்கள் சாய்ந்து பழுதடைந்திருப்பதால் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர். புதுவயல் பகுதியில் மதியம் சிறிதுநேரம் மின்விநியோகம் செய்யப்பட்டு மீண்டும் துண்டிக்கப்பட்டு மாலை வரை மின்விநியோகம் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.மேலும் நண்பகல்வரை மக்கள் வீட்டுக்குளேயே முடங்கிக் கிடந்தனர்.
 ரயில் சேவை பாதிப்பு:  காரைக்குடி புதிய, பழைய பேருந்துநிலையங்களிலும், கடை வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடிக் காணப்பட்டன. பேருந்துகள் இயக்கப்பட வில்லை. காரைக்குடியிலிருந்து காலை 6.40 மணிக்கு திருச்சிக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் திருமயம் அருகே இருப்புப்பாதையில் மரம் விழுந்ததால் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டு காரைக்குடி ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்து.
   இந்நிலையில் காவல்துறையிர், மின்சார வாரியப்பணியாளர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.
மானாமதுரை: கஜா புயல் காரணமாக மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.  இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. கண்மாய், குளங்கள், ஊருணிகளுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. இதனிடையே விவசாயத்துக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். பிற்பகலுக்கு பின்னர் மேகங்கள் சூழ்ந்து மப்பும்மந்தாரமுமாக காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மானாமதுரை பேருந்து நிலையம் பயணிகள் இல்லாமல் காணப்பட்டது. இப்பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT