கீழமேல்குடி, கிருங்காங்கோட்டை கண்மாய்களுக்கு வைகையிலிருந்து தண்ணீர் வரவில்லை: விவசாயிகள் புகார்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கீழமேல்குடி, கிருங்காங்கோட்டை கண்மாய்களுக்கு,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கீழமேல்குடி, கிருங்காங்கோட்டை கண்மாய்களுக்கு, தற்போது வைகையாற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செல்லவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
மானாமதுரை ஒன்றியத்தின் பெரும் பகுதி விவசாயம் வைகை பாசனத்தையும், கிணற்றுப் பாசனத்தையும் நம்பிதான் நடக்கிறது. வைகையில் தண்ணீர் வராதது, மழை  பொய்த்தது போன்ற காரணங்களால், கடந்த நான்காண்டுகளாக இந்த ஒன்றியத்தில் போதுமான விளைச்சல் இல்லாமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். 
இந்நிலையில், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் மழைநீர் வைகையாற்றுக்கு வந்து சேருவதால், வைகையில் செல்லும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களிலுள்ள கால்வாய்களின் மதகுகள் திறக்கப்பட்டு, பல கண்மாய்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
ஆனால், மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த வைகையாற்றை ஒட்டி அமைந்துள்ள கிருங்காங்கோட்டை, கீழமேல்குடி ஆகிய கிராம கண்மாய்களுக்குச் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் வறண்டு கிடக்கின்றன. வைகையாற்றிலிருந்து பிரியும் இக் கால்வாய்களை தூர்வாரி மேம்படுத்தாததால், புதர்மண்டிக் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. 
கால்வாய்கள் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லாததால், இதன்மூலம் பாசன வசதி பெறும் கிருங்காங்கோட்டை, கீழமேல்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
இது குறித்து கிருங்காங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் கூறியது: கிருங்காங்கோட்டை கால்வாயை மேம்படுத்தியதாக, பொதுப்பணித் துறை நிர்வாகம் ரூ. 6 லட்சம் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், மேம்பாட்டுப் பணி நடந்ததற்கான அடையாளமே இல்லை. கால்வாயை மேம்படுத்தும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
கீழமேல்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளைமுத்து கூறியது:  சிவகங்கை மாவட்டத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, கீழமேல்குடி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், கிராம மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com