பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்காததால் குடும்ப அட்டையை ஒப்படைக்க விவசாயிகள் முடிவு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, அப்பகுதி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, அப்பகுதி விவசாயிகள் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழையால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதானக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பகுதிகளின் முதல்போக பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி 1,130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.  ஆனால், தண்ணீர் திறந்து 25 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. 
இதைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட பெரியாறு கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகள் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி சிவகங்கை-மேலூர் சாலையில் கீழப்பூங்குடி விலக்கு அருகே மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் க. லதா உள்ளிட்ட அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.   ஆனால், 4 நாள்கள் ஆகியும் இன்னும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. 
ஏற்கெனவே, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து ஒரு மாதம் கடந்து விட்ட நிலையில், இன்னும் தாமதப்படுத்தினால் வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமாகிய குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தனிடம் திரும்ப  ஒப்படைக்க  உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com