கிராமங்களுக்கு அரசு பேருந்து சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

சிவகங்கை  மாவட்டம், காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்துக்குள்பட்ட  பல்வேறு

சிவகங்கை  மாவட்டம், காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்துக்குள்பட்ட  பல்வேறு கிளைப் பணிமனைகளிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசுப் போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 நகரங்களில் கிளை பணிமனைகள் உள்ளன. இந்தப் பணிமனைகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகளும், 275-க்கும் மேற்பட்ட புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் கிளை பணிமனைகளிலிருந்து ஏராளமான கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் எந்தவொரு முன்னறிவிப்பின்றியும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழநெட்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சி. அய்யாசாமி கூறியது: சிவகங்கை அரசு போக்குவரத்துக் கழக கிளைப் பணிமனையிலிருந்து பேருந்து எண்-24 , குறிச்சியிலிருந்து மானாமதுரைக்கும், மானாமதுரையிலிருந்து கட்டிக்குளம், பழையனூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து சேவை கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று, பேருந்து எண்-21, மானாமதுரையிலிருந்து இளையான்குடிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையிலிருந்து சிவகங்கை மாவட்டம் லட்சுமிபுரம், மருதங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு பேருந்து எண்- 15 இயக்கப்பட்டு வந்ததும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து எண்-19 மானாமதுரையிலிருந்து கீழநெட்டூர் வழியாக முனைவென்றி வரை  இயக்கப்பட்டு வந்ததும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பிற கிளை பணிமனைகளிலிருந்தும் ஏராளமான கிராமங்களுக்கு அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமிலும், பொதுமக்கள் பலமுறை மனு மற்றும் புகார் அளித்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மாணவ, மாணவியர் உள்பட அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார். 
இது குறித்து போக்குவரத்து கழக உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தது: டீசல் விலை உயர்வு, பேருந்துகளுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் கிடைப்பதில் பற்றாக்குறை நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பேருந்தை சரிவர பராமரிக்க முடியவில்லை. மேலும், உரிய வருவாய் இல்லாத வழித்தடங்களில் பேருந்து சேவையை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
எனவே, மேற்கண்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தால், மீண்டும் அதே வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com