"தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர கம்பன் அரங்குகளை நோக்கி இளைஞர்கள் வரவேண்டும்'

தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர வேண்டுமென்றால் கம்பன் அரங்குகளை நோக்கி இளைஞர்கள் வர வேண்டும் என

தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர வேண்டுமென்றால் கம்பன் அரங்குகளை நோக்கி இளைஞர்கள் வர வேண்டும் என காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறினார்.
காரைக்குடி கம்பன் அறநிலை-கம்பன் கழகத்தார் சார்பில் கம்பன் மணிமண்டபத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கம்பன் திருநாள் விழாவின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியில் "கம்பனும் வால்மீகியும்' என்ற தலைப்பில் தமிழருவிமணியன் பேசியது:
வால்மீகியின் ராமாயணத்தை படித்தால் தான் கம்பனின் ராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். கம்பன் தனது காவியத்தின் மூலம் தமிழ்ச் சமுதாயத்தை செம்மைப்படுத்த முயன்றவன். அதனால்தான் வால்மீகியிடம் இல்லாத கடவுள் வாழ்த்து உலகம் யாவையும்... என்ற பாடலுடன் கம்பனிடத்திலே தொடங்குகிறது. அறத்தையும், வாழ்வையும் செம்மைப்படுத்த கம்பன் ஆதிக்கம் செலுத்தியவன். அதனால் தான் தனது காவியத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட திருக்குறளை எடுத்து கையாண்டுள்ளான்.
மனிதனின் மாண்பு புலனடக்கத்தைக் கொண்டது. ஆசைகளின்றி இந்த மண்ணில் வாழ முடியாது என்றாலும் ஆசைகளை சீரமைத்துக் கொள்ள வேண்டும். அறம் சார்ந்த இன்பங்களை அனுமதிக்க வேண்டும். வடமொழியிலே வால்மீகி வடித்த காப்பியத்தைக் கம்பன் படித்துப் பார்க்கிறான். இதில் அடிநாதமாக விளங்கக்கூடியது ஒழுக்கமும், அறமும் மட்டுமே. ஆனாலும் அதனை தமிழில் கம்பன் அப்படியே தந்துவிடவில்லை. மேலும் செம்மையாக்குகிறான்.
வால்மீகி ராமாயணத்தை படிக்காமல் கம்பனின் ராமாயணத்தை படிக்காதீர்கள். கம்பனின் நோக்கமும், போக்கும், இந்த தமிழ்ச்சமுதாயத்தின் பண்பாடுகளைச் சார்ந்தது. வால்மீகி ராமாயணத்தில் ராமனை ஒரு மானுடனாக காட்டுகிறான். ஆனால் சில பாத்திரங்களைப்படைத்து திருமாலின் வடிவமாக்கிக்காட்டுகிறான் கம்பன். புலனடக்கம் பற்றி தான் கம்பன் தனது காப்பியத்தில் பேசுகிறான். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கம்பன் அரங்குகளுக்கு வருவதால் ஆகப்போவது என்ன, இளைஞர்கள்தான் கம்பன் அரங்குகள் நோக்கி வரவேண்டும். இளைஞர்களை செம்மைப்படுத்துவதற்கும், பண்புள்ளவர்களாக செதுக்குவதற்கும் கம்பனிடத்திலே ஏராளமான செய்திகள் உள்ளன என்றார்.
அதைத்தொடர்ந்து "கம்பன் சொல்லும் ராமன் வில்லும்' என்ற தலைப்பில் சென்னை பாரதி திருமகன், யுவ கலா பாரதி பி. கலைமகள் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கம்பன் அறநிலைத் தலைவர் சத்தி அ. திருநாவுக் கரசு வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் அய்க்கண் அறிமுக உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com