வேலை உறுதித் திட்டம்: ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டது

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டதாக சிவகங்கை


பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பிரசாரம் பொய்யாகிவிட்டதாக சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கூறினார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் தேசிய முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
இக் கூட்டங்களில் ஹெச்.ராஜா பேசியதாவது: கடந்த தேர்தலில் கன்னியாகுமரியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. அந்த தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு திட்டப் பணிகள் நடந்துள்ளன. இதுபோல் தமிழகத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் பாஜக அரசு அமைந்தால் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கிடைக்கும். 
கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது சிவகங்கைத் தொகுதியில் பிரசாரம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ரத்து செய்யப்படும் எனக் கூறினார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் இத் திட்டத்தின் வேலை நாள்கள் 150 ஆக உயர்த்தப்பட்டதோடு அதற்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 224 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ப.சிதம்பரம் கூறியது பொய்யாகியுள்ளது  என்றார். 
அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், அமைச்சர் பாஸ்கரன், அதிமுக ஒன்றியச் செயலாளர் எம்.குணசேகரன், நகரச் செயலாளர் விஜி.போஸ், மானாமதுரை நகர கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தர்ம யுத்தம்: திருப்பத்தூரில் நடைபெற்ற  வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் ஹெச் ராஜா பேசுகையில், தற்போது நடைபெற உள்ள தேர்தல் அரசியல் போட்டி அல்ல. ஒரு தர்ம யுத்தம். ஒரு பக்கம் மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தரும் பா.ஜ.க, அதிமுக. ஆகிய நல்ல சக்திகளுக்கும் மறுபுறம் ஆட்சியில் தவறாக சாம்பாதித்ததை வெளிநாடுகளில் கொண்டு சேர்க்கும்  திமுக, காங். ஆகிய தீய சக்திகளுக்கும் இடையிலான யுத்தம். நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க மோடி பிரதமராக வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செந்தில்நாதன் எம்.பி., முன்னிலை வகித்தார். பா.ஜ.க, தேசிய நிர்வாகி விஸ்வநாத கோபால் வரவேற்றறார்.  கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com