தேனி

ஹைவேவிஸ் - மேகமலை கொண்டை ஊசி  வளைவுகளில் "பேவர் பிளாக்' வசதி: வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு

DIN

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை  நெடுஞ்சாலையில் கொண்டை ஊசி வளைவுகளில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் வசதி, வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பிற மலை சாலைகளிலும் இதனை அமைக்க வலியுறுத்தியுள்ளனர்.

  சின்னமனூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி  மலைத்தொடரில் அமைந்துள்ளது ஹைவேவிஸ் மலைப்பிரதேசம். இப்பகுதியானது சின்னமனூரில் இருந்து 52  கி.மீ. தொலைவில் உள்ளது. அதில் 3 கி. மீ.  மட்டுமே சமதளப்பகுதியில் உள்ளது.  49  கி. மீ. மலைச் சாலையாகும்.  

 கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ள ஹைவேவிஸ் மலை பகுதி குளிர்ந்த பிரதேசம் என்பதால் கொடைக்கானல், ஊட்டி போன்று இங்கும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.இந்நிலையில், தமிழக அரசு ரூ.80.67 கோடி நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகிறது. மலைச் சாலையில் கொண்டை ஊசி வளைவுகளில் அடிக்கடி பெய்யும் மழையால் தார்ச்சாலை சேதமாகிவிடும்.

இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் அத்தகைய இடங்களில் சிமென்ட் கான்கிரீட் சாலையாக மாற்றுவார்கள். ஆனால் அதிலும்  தொடர் நீர்வரத்து காரணமாக பாசன் பிடித்து விபத்துகள் நேரிடும் வாய்ப்பு உள்ளது.

 இதனால் ஹைவேவிஸ், மேகமலை மலைச்சாலையில் உள்ள 18 கொண்டை ஊசி வளைவுகளிலும் நெடுஞ்சாலைத் துறையினர் பேவர் பிளாக் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இது, வாகன சக்கரங்களுக்கு பிடிப்பு தன்மை அதிகமாக இருக்கும் வகையிலும், புதிதாக வாகனம் ஓட்டுபவர்களும் பாதுகாப்பாக மலைப்பயணம் செய்யும் வகையிலும் இச்சாலையை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: கொண்டை ஊசி வளைவுகளுக்கு சாதாரண பேவர் பிளாக் கல்லை பயன்படுத்தினால் பாதுகாப்பு இருக்காது என்பதால், பிரத்யேகமாக தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பேவர் பிளாக் கல்லை பயன்படுத்தியுள்ளோம். இந்த கற்களுக்கு இடையே இடைவெளி இருப்பதால் நீரோட்டத்துக்கு தடையிருக்காது. மேலும், சாலைக்கும் சேதம் ஏற்படாது. அதோடு, பேவர் பிளாக்கில் ஏற்படும் உராய்வு காரணமாக வாகனங்களின் சக்கரங்களுக்கு நல்ல உறுதித் தன்மை கிடைக்கும். இதனால், கொண்டை ஊசி வளைவுகளில் விபத்து தவிர்க்கப்படும். தற்போது, ஹைவேவிஸ் - மேகமலைச் சாலை  மிகவும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

 வாகன ஓட்டிகள் பேவர் பிளாக் வசதியை வரவேற்றுள்ளதோடு, மற்ற மலைச் சாலைகளிலும் இதனை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT