திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

பாஜக ஆட்சியில் பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்: காங்கிரஸ் தேசிய செயலர் சஞ்சய் தத்

DIN | Published: 12th September 2018 05:35 AM

நாட்டில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ள நிலையில், பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பாஜக ஆட்சி பயனளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலர் சஞ்சய் தத் தெரிவித்தார்.
    தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின்  ரஃபேல் போர் விமான ஊழலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், தேனி நகரத் தலைவர் முனியாண்டி, வட்டாரத் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்களவை முன்னாள் உறுப்பினர் ஜே.எம்.ஆருண், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசன் ஆரூண்,  சோழவந்தான் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.சந்திரசேகரன்,  காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலர்கள் டி.செல்வம், அருள் பெத்தையா ஆகியோர் பேசினர்.
காங்கிரஸ் தேசிய செயலர் சஞ்சய் தத் பேசியது:  நரேந்திரமோடி பிரதமர் ஆன பிறகு  ஏழை மற்றும் உழைக்கும் மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். பெட்ரோல், டீசல், எரிவாயு, பால், பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ள நிலையில், பெரும் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு மட்டுமே பாஜக ஆட்சி பயன் அளிக்கிறது. ரஃபேல் போர் விமான ஊழலில் மக்களின் வரிப் பணம் ரூ.41,250 கோடி சுரண்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து ராகுல் காந்தி மக்களவையில் விவாதிக்க அழைத்தற்கு பிரதமர் மறுத்து விட்டார். போர் விமானத்திற்கு உதிரி பாகம் தயாரிக்கும் உரிமத்தை இந்துஸ்தான் நிறுவனத்திற்குத் தான் வழங்க வேண்டும். மாறாக, இந்த உரிமத்தை தனியாருக்குச் சொந்தமான பெரும் நிறுவனத்திற்கு பாஜக அரசு வழங்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தேச பாதுகாப்பிற்காக 126 போர் விமானங்கள் வாங்க முயன்ற போது அதை பாஜக வினர் தடுத்தனர். தற்போது  ரஃபேல் போர் விமானம் வாங்கப்பட்டது அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கூட தெரியவில்லை என்றார்.

More from the section

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: இளைஞர் உள்பட 5 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர ஊர்தி சேவை
சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: இளைஞர் உள்பட 5 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
கம்பத்தில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது
கம்பம் வட்டாரப் பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்