உத்தமபாளையம் அருகே ஓடைகள் ஆக்கிரமிப்பால் கண்மாய்களுக்கு நீர்வரத்து நிறுத்தம்: விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் ஓடைகள்  ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டியில் ஓடைகள்  ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால் கண்மாய்கள் நீர்வரத்தின்றி வறண்டு,  விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து ஓடைகள் வழியாக  மழை நீர் சென்று அந்தந்த பகுதியிலுள்ள குளங்களில் தேங்கி நிற்கும். 
அதன் மூலம் குளங்களை சுற்றியுள்ள விவசாய விளை நிலங்களிலுள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில்  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயப் பணிகள் நடைபெறும். 
மேலும் மேய்ச்சலுக்குச் செல்லும்    கால்நடைகளுக்கு  முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இருக்கும்.
இந்நிலையில், உத்தமபாளையம் அடுத்த  உ.அம்மாபட்டி அருகே உள்ள சாலை மலையிலிருந்து செல்லும் ஓடைகள் மற்றும் குளங்கள்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஓடைகள் வழியாக வழிந்தோடும் மழை நீர் அங்குள்ள சாலக்கரையான், சடையன் குளம் உள்ளிட்ட 5-க்கு மேற்பட்ட குளங்களில் தண்ணீர் தேங்கவில்லை.
இந்தாண்டு  ஓரளவிற்கு பருவமழை கை கொடுத்த நிலையிலும்  நீர் நிலைகள்ஆக்கிரமிப்பு காரணமாக  கிடைத்த நீரையும் சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக   விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.  
இது குறித்து விவசாயிகள் கூறியது: குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதால் அவை தண்ணீரின்றி வறண்டு உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   
 எனவே, அம்மாபட்டி பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள ஓடைகள், கண்மாய்கள் மற்றும் குளங்களை  மீட்டு நீர் வள ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com