ஆண்டிபட்டி அருகே  அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சாலை, கழிவுநீர்  கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சாலை, கழிவுநீர்  கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீ ரெங்கபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இக்கிராமத்தில் மின் விளக்குகள் சரிவர அமைக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள மின் விளக்குகள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் குழந்தைகள், பெண்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.
தெருக்களில் கழிவு நீர் கால்வாய் போதிய அளவில் அமைக்காததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. மேலும், குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது.
ஸ்ரீரெங்கபுரம் கிராமத்திலிருந்து ஜம்புலிபுத்தூர் செல்லும் இணைப்புச் சாலையை விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் விளையும் விளை பொருள்களை இந்த வழியேதான் வாகனங்கள் மூலம் ஆண்டிபட்டிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இச்சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள், கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 
ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதிலும் பாராமுகமாக உள்ளது. இதுபோன்ற குறைகளை தீர்க்க வலியுறுத்தி, ஊராட்சி அலுவலர், ஒன்றிய அலுவலகங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிகையும் மேற்கொள்ளப்படவில்லை. 
எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com