தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதியில்லாத  ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள்

தேனி மாவட்டத்திலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வசமுள்ள மாணவர் விடுதிகளில்

தேனி மாவட்டத்திலுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வசமுள்ள மாணவர் விடுதிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மாணவ, மாணவியர் அவதிப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன.
தேனி மாவடத்திலுள்ள பெரும்பான்மையான ஆதி திராவிடர் விடுதிகளில் அண்டை மாநிலமான கேரளத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகளே அதிக அளவில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். 
அதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும்  உத்தமபாளையம், க.புதுப்பட்டி, தேவாரம், கோட்டூர் என பல்வேறு  இடங்களிலுள்ள விடுதிகளில் தங்கி பயில்கின்றனர். 
இந்த விடுதியில் தங்கி கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. மேலும், மாணவ, மாணவியர் தங்கும் அறைகள் மற்றும் விடுதிகள் சுகாதாரமின்றி இருப்பதால், தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். 
பல விடுதிகளில் தண்ணீர் வசதி இல்லாததால், மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது. 
குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு மாணவிகள் தெருக் குழாய்களுக்குச் சென்று தண்ணீரை பிடித்து வரவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அவர்களது கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தெரிவித்தது: உத்தமபாளையத்தில் செயல்படும் மாணவிகள் தங்கும் விடுதிகளில் பல ஆண்டுகளாக தண்ணீர் வசதியில்லை. மாணவிகள் சமையல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மாலை நேரங்களில் தெருத் தெருவாகச் சென்று தண்ணீர் சுமந்து வருகின்றனர்.
 கோட்டூரிலுள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் போதுமான கட்டமைப்பு வசதி இல்லை. இதனால், மாணவிகளின் குளியல் அறை சாலையில் செல்லும் பேருந்திலிருந்து தெரியும் அளவில் உள்ளதால், மாணவிகள் மனவேதனை அடைகின்றனர். 
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறியது: பட்டியல் இனப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் அடிப்படை வசதி என்பது முறையாக இல்லை. மாணவர்கள் தங்களிடம்  புகார் தெரிவிக்கும்போது, ஆசிரியர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரிடம் தெரிவித்தாலும் எவ்வித பயனும் இல்லை என்றார்.  
எனவே, அரசு தங்கும் விடுதிகளில் மாணவ, மாணவியரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாணவ-மாணவியர் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com