வாக்குப் பதிவு இயந்திரங்களை இணைப்பதில் குளறுபடி: தேனி மாவட்டத்தில் வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம்

தேனி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி

தேனி மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி ஆகியவற்றை இணைப்பதில் குளறுபடி ஏற்பட்டதாலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி பழுதடைந்ததாலும் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
  பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்த வாக்குச் சாவடி அமைந்துள்ள செவன்த் மழலையர் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில், வாக்குச் சாவடி எண்: 92, 94 ஆகியவற்றில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி ஆகியவற்றை இணைப்பதில் குளறுபடி ஏற்பட்டது. இதனால், அந்த வாக்குச் சாவடிகளில் தாமதமாக காலை 7.45 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வடுகபட்டி சங்கரநாராயணன் நினைவு  நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் 196 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மின்னணு வாக்குப் திவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், மாற்று இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. 
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆர்.சி. பள்ளி வாக்குச் சாவடி, ஒண்டிவீரன் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாடார் சரஸ்வதி பாலர் பள்ளி, முத்துத்தேவன்பட்டி, கெங்குவார்பட்டி, பாலசமுத்திரம், பாலுத்து, நாரயணத்தேவன்பட்டி ஆகிய இடங்களிலும் வாக்குப் பதிவு தொடங்குவதில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகளில் சிலவற்றில் காலை 7 மணிக்கு 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், 3 கட்டுப்பாட்டு இயந்திரம், 17 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி பழுதடைந்து மாற்றப்பட்டது. இடைத் தேர்தல் நடைபெறும் ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் 6 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி, பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், 2 கட்டுப்பாட்டு கருவி, 3 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி பழுதடைந்து மாற்றப்பட்டது.  பிற்பகல் 12.30 மணிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிகள் சிலவற்றில் 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2 கட்டுப்பாட்டுக் கருவி, 7 யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவி பழுதடைந்து மாற்றப்பட்டது.
மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக காலை 7 மணிக்கு வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருந்தனர்.
 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததால் பல்வேறு இடங்களில் வாக்குப் பதிவில் காலதாமதம் ஏற்பட்டதாக வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்கள் சிலர் கூறினர்.
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரத்தில் உள்ள 67-ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு விளக்கும் விதமாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவுக்குப்பின், பதிவாகி இருந்த வாக்குகளை அழிக்காமல், வாக்குப்பதிவு தொடங்கியது. முற்பகல் 11 மணி அளவில் இந்த விபரம் வாக்குச்சாவடி அலுவலருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தை திறந்து மாதிரி வாக்குகளை அழிக்க முற்பட்டபோது பிரச்னை எழுந்தது. சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனைத்து கட்சியினரையும் சமாதானம் செய்தனர்.
 மேலும் அங்கு வாக்குச்சாவடி அலுவலராக இருந்த சங்கரன் என்பவரை மாற்றி கௌதம் என்பவரை தேர்தல் அலுவலராக பணிபுரிய ஆண்டிபட்டி மண்டல அலுவலர் ஆறுமுகம் உத்தரவிட்டார். 
  இதனை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப்பின் மீண்டும் வாக்குப்பதிவு தொடர்ந்தது. இது குறித்து தேனி மக்களவை தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் பாலசமுத்திரம் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து அதிகாரிகள் மற்றும் கட்சியினரிடம் விசாரித்து சென்றார்.
பழனி:  திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரபட்டி 12 ஆவது வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் (எண்-78) காலை 9 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. 
 சுமார் 222 வாக்குகள் பதிவான நிலையில், இயந்திரத்தின் கோளாறை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். இதனால் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
   இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வேலுசாமி சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். இயந்திரத்தை சரிசெய்ய முடியாத நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றொரு புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பொருத்தி பணியை தொடர்ந்தனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com