பட்டாசு வழக்கு ஜன.22-க்கு ஒத்திவைப்பு: விருதுநகரில் பட்டாசு ஆலைகள் திறப்பதில் காலதாமதம்

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பட்டாசு தொடர்பான வழக்கு விசாரணை, 2019 ஜனவரி 22 ஆம் தேதிக்கு

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பட்டாசு தொடர்பான வழக்கு விசாரணை, 2019 ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.  
நாடு முழுவதும் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கில், பட்டாசு தயாரிக்கவும், வெடிக்கவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளைக் கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது, சரவெடி பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
    இதனிடையே, தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு மூடப்பட்ட பட்டாசு ஆலைகள், நீதிமன்ற உத்தரவால் கடந்த 40 நாள்களாகத் திறக்க முடியாமல் ஆலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டுள்ளதால், அவற்றில் வேலை பார்க்கும் பல லட்சம் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், பட்டாசுக்கு தேவையான காதிதப் பெட்டி தயாரிப்பு, குழாய் தயாரிப்பு உள்ளிட்ட உபதொழில்களும் ஸ்தம்பித்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், டிசம்பர் 11 ஆம் தேதி பட்டாசு ஆலைகளை திறக்க உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை பிறப்பிக்கும் என எண்ணி இருந்தனர். ஆனால், செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்த வழக்கு விசாரணையை, நீதிபதி ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும், அதற்குள் பசுமை பட்டாசு எப்படி தயாரிக்க வேண்டும் எனற விதிமுறைகளை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ. ஆசைதம்பி கூறியதாவது:
     நீதிமன்றம் வழக்கை 2019 ஜனவரி 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நடக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஆலை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரும் இதையே கூறியுள்ளார். எனவே, பட்டாசு ஆலைகளை திறக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com