திங்கள்கிழமை 17 டிசம்பர் 2018

மாணவிகளிடம் பாலியல் பேரம் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி நிர்மலா தேவி மனு

DIN | Published: 13th November 2018 05:00 AM

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கிலிருந்து தன்னை விடுக்கக் கோரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (நவ.13) நடைபெறுகிறது.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக வழக்கு ப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் மூவரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மூவருக்கும் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்ட நிலையில், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் கடந்த 8 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு பதில் மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக மூவரும் நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிசிஐடி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் நிர்மலா தேவி சார்பில் அவரது வழக்குரைஞர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தான் குற்றமற்றவர் என்றும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் அந்த மனுவில் நிர்மலாதேவி தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இதற்கு பதில் மனுவை சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இதன் மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
நீதிமன்றத்துக்கு வெளியே முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது என்றார். பின்னர் மூவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

More from the section

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி


அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் 
கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

தாதம்பட்டி சாலையில் உள்ள மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி
விருதுநகரில் ஐயப்பனுக்கு விளக்கு பூஜை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தமிழ் இலக்கிய பேரவை ஆலோசனைக் கூட்டம்