விருதுநகர்

திருச்சுழி பகுதியில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவு: கருவிலேயே கொல்லப்படுவது அம்பலம்

வி. முத்துராமன்

விருதுநகர் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான திருச்சுழி பகுதியில் பெண் குழந்தைகள் பிறப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு பல்வேறு ஸ்கேன் மையங்களில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் சிசுக்களின் பாலினம் குறித்து மறைமுகமாக பெற்றோர்களுக்கு தெரிவிப்பதால், அவை கொல்லப்படுவதாக சுகாதார துறையினர் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன் அடிப்படை யில்கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாவட்டத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், திருச்சுழி பகுதியில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம்
குறைந்துள்ளதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது தான் திருச்சுழி பகுதியில் பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்படுவது வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது திருச்சுழி, நரிக்குடி பகுதிகள் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகள்.
இங்கு விவசாயம் இல்லாததால், பெரும்பாலும் கருவேல மரங்களே வளர்ந்துள்ளன. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து, சாலை, குடிநீர் வசதி, கழிப்பறை என எந்த வித அடிப்படை வசதிகளும் முழுமையடையவில்லை. இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் அன்றாட பிழைப்பிற்கே திண்டாடி வருகின்றனர்.
இதனால், பெண் குழந்தைகள் பெற்றால் படிப்பு, திருமணம் போன்றவற்றுக்கு கூடுதல் செலவு செய்ய நேரிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
மேலும், தங்களது பொருளாதார நிலையும் மிகவும் மோசமாக இருப்பதால் பெண் குழந்தைகள் பெற்று கொள்ள விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மூன்று அல்லது நான்கு மாத கர்ப்பிணி பெண்களை அருப்புக்கோட்டை, கமுதி, மானாமதுரை முதலான ஊர்களில் உள்ள ஸ்கேன் மையங்களுக்கு அழைத்துச் சென்று வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து தெரிந்து கொள்கின்றனர்.
அதில், பெண் குழந்தைகள் என தெரிய வந்தால், கிராமப் புறங்களில் உள்ள நாட்டு வைத்தியரின் மூலம் கருவை கலைத்து விடுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஆண் குழந்தைகளுக்கு இணையாக இருக்க வேண்டிய பெண் குழந்தைகள் பிறப்பு 25 சதவீதம் குறைந்துள்ளது என சுகாதார துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆண்-பெண் பாலினத்தைச் சொல்ல குளிர்பானங்களே குறியீடு!
இது குறித்து பொது சுகாதார துறை அலுவலர்கள் கூறியது: ஆண், பெண் குழந்தை பிறப்பு சதவீதம் சரி சமமாக இருக்க வேண்டும். ஆனால், திருச்சுழி பகுதியில் பெண் குழந்தை பிறப்பு 25 சதவீதம் குறைவானது உண்மையே. இதற்கு காரணம் பல்வேறு ஸ்கேன் மையங்களில் கர்ப்பிணி பெண்களிடம் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை மருத்துவர்கள் கூறி விடுகின்றனர். ஸ்கேன் சென்டரில் எம் (ஆண்), எப்(பெண்) என்பதை மறைமுகமாகக் குறிக்கும் வகையில் குளிர் பானங்களின் பெயர்களைக் கூறி பருகுங்கள் என தெரிவிக்கின்றனர். இதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்ளும் கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தினர், பெண் குழந்தைகள் என தெரிந்தால் கிராமப்புற நாட்டு வைத்தியர் மூலம் கருவிலேயே அவற்றை அழித்து விடுகின்றனர். திருச்சுழி பகுதியில் இதன் காரணமாகவே பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், தற்போது பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் அதிகரித்துள்ளது. இக்கண்காணிப்பு தொடர்ந்தால் மட்டுமே இப்பகுதியில் பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க முடியும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT