"பசுமைப் பட்டாசு' உற்பத்தி குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் விளக்கமளிக்க வேண்டும்: பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

"பசுமைப் பட்டாசுகள்' என்றால் என்ன என்றும், அவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் மத்திய அரசின்

"பசுமைப் பட்டாசுகள்' என்றால் என்ன என்றும், அவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
 இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்.இளங்கோவன், செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
 நாடு முழுவதும் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை இல்லை என உச்சநீதிமன்றம், கடந்த அக்.23 ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், இனி "பசுமைப் பட்டாசுகளை' தயாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "பசுமைப் பட்டாசு' என்றால் என்ன என தயாரிப்பாளர்களுக்கு தெரியாத நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு, பட்டாசு ஆலைகளை திறக்காமல்,  தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், உச்சநீதிமன்றம் அக்டோபர் 23 ஆம் தேதி , பட்டாசு உற்பத்தியாளர்கள் மாசு குறைந்த பட்டாசுகள் (மேம்படுத்தப்பட்ட பட்டாசு) மற்றும் "பசுமைப் பட்டாசுகளை'யே தயாரிக்க வேண்டும். இவைகளை மட்டுமே வியாபாரிகளும் விற்பனை செய்ய வேண்டும். சரவெடிகள் அல்லது தொடர்வெடிகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரியம் உப்பு, தடைசெய்யப்பட்டுள்ள ரசாயனப் பொருள்களான ஆண்டிமணி, ஆர்சனிக், விந்தியம், காரியம், பாதரசம் ஆகியவை கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது. இவைகளால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யவும் கூடாது. தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி, இந்திய வெடிபொருள் விதிகள் 2008-ன்படி, தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
"பசுமைப் பட்டாசு' என்றால் என்ன என்று இதுவரை மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் கூறவில்லை. வெடிபொருள் சட்டதிட்டங்களின் படியே பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், என்னவென்று தெரியாத "பசுமைப் பட்டாசுகளை' எப்படி தயாரித்து விற்பனை செய்ய இயலும்?. எனவே, "பசுமைப் பட்டாசு' என்றால் என்ன என்பது குறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் விளக்கமளிக்க வேண்டும். பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், விருதுநகர் மாவட்டத்தின் பொருளாதாரமும் சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com