விருதுநகர் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்கள் 150 பேரை பள்ளியில் சேர்க்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் நிகழாண்டு 150 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்

விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் நிகழாண்டு 150 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிகளில் படிக்காமல் வெளியேறியுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்கள், மீண்டும் குழந்தை தொழிலாளர்களாக மாறி குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னர், அவர்களை பள்ளிகளில் சேர்த்து படிக்க  கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 விருதுநகர் மாவட்டம், அரசு பொது தேர்வில் கடந்த 2002 முதல் 2011 வரை தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. அதன் பின்னர், சில ஆண்டுகள் முதலிடத்தை தக்க வைக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மீண்டும் முதலிடத்தை பெற்றது. இதனால், ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தினர், மாவட்ட நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், நிகழாண்டு விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. மேலும், இந்த மாணவர்கள் தங்களது குடும்பச் சூழல் காரணமாக செங்கல் சூளை, கடைகளில் பணி புரிவதாகவும், சிலர் வீட்டிலே முடங்கி யிருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
ஒரு மாணவர் தொடர்ந்து ஒரு மாதமாக பள்ளிக்கு வராவிட்டால் அவர் குறித்த தகவலை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், வட்டார வள மையம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், அந்த இடைநின்ற மாணவரை கண்டறிந்து, அவருக்கு மன அடிப்படையிலான ஆலோசனைகள்  வழங்கி பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். ஆனால், விருதுநகர் மாவட்டத்திலோ, பள்ளிகளுக்கு தொடர்ந்து வராமல் இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விபரங்களை தலைமை ஆசிரியர்கள் தெரிவிப்பதில்லை என கூறப்படுகி றது. இதன் காரணமாக அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கும் தகவலின் பேரில் தொழிலாளர் நலத்துறை, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் பணி புரிவோர், செங்கள் சூளை மற்றும் கடைகளில் பணி புரியும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கிராமப் பகுதிகளில் இடைநின்ற மாணவர்கள் குறித்து எந்த தகவலும் தெரியாததால், அவர்கள் கூலி வேலைக்கு செல்வதாக கூறப்படுகிறது. மேலும், இவர்களது பழக்க வழக்கமும் மாறுவதால் குற்றச் செயல்களில்ஈடுபட வாய்ப்புள்ளதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அரசு மருத்துவமனை பின்புறம் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 22 மாணவிகள் பெற்றோர்கள் அனுமதியுடன் பள்ளிக்கு வராமல் நின்றுள்ளனர். 
அதேபோல், வள்ளியூர் பி. குமாராலிங்காபுரத்தில் 22 மாணவ, மாணவிகள், நரிக்குடி கீழத் தெருவில் 6 பேர், குமிழங்குளத்தில் 10 பேர், முத்துராமலிங்காபுரத்தில் 4 பேர், மானூரில் 3 பேர், வத்திராயிருப்பு கொடிக்குளத்தில் 5 பேர், மேலப்பாளையத்தில் 7 பேர், ராமசாமிபுரம் 4, மேல கோபாலபுரம் 4, புதுப்பட்டி 4, கான்சாபுரம் 4, கூமாபட்டி 6, தம்பிபட்டி 3, வெம்பக்கோட்டை மடத்துபட்டி 3, விஜயகரிசல்குளம் 2, எ. முக்குளம் 4, பிள்ளையார்குளம் 4, வீரசோழன் 5, மேட்டமலை 10, சாத்தூர் வெங்கடாசலபுரம் 10, நரிக்குடி அம்பேத்கர் நகர் 5 என சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழாண்டு பள்ளியில் இடைநிற்றலில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட குழந்தை தொழிலாளர் ஆய்வறிக்கை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த மாணவர்களை முறையாக பள்ளியில் மீண்டும் சேர்க்க முடியாமல் வட்டார வள மைய அலுவலகம் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
 இது குறித்து குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் கூறியது: ஒரு மாதமாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர், உயர் அலுவலர்களுக்கு முறையாக தகவல் தெரிவிப்பதில்லை. அவ்வாறு தெரிவித்தால், இடையில் நின்ற மாணவ, மாணவிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து தகுந்த ஆலோசனை வழங்கி பள்ளிகளில் சேர்த்து விடலாம். திருச்சுழியில், பூப்பெய்தும் மாணவிகளை பெற்றோர்களே பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அவர்களிடம் பேசி வருகிறோம், விரைவில் அந்த மாணவிகள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 
அதேபோல், பி. குமாரலிங்காபுரத்தில் உள்ள 22 மாணவர்களை தேடி சென்றால், எங்காவது காட்டு பகுதிக்குச் சென்று விட்டதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இடைநின்றுள்ளனர். அவர்களை ஆங்காங்கு உள்ள உண்டு உறைவிட பள்ளி, குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com