பாளையம்பட்டி கண்மாயில் கழிவுநீர் கலப்பு: விவசாயம் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டி கிராமத்தில் உள்ள மாங்குளம் கண்மாயில் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டி கிராமத்தில் உள்ள மாங்குளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் மானாவாரி விவசாயத்திற்குக் கண்மாய் நீரைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அக்கண்மாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அருப்புக்கோட்டை அருகே உள்ளது பாளையம்பட்டி கிராமம். இக்கிராமத்திலிருந்து மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலைக்குச் செல்லும் வழியில் மாங்குளம் கண்மாய் உள்ளது. இப்பகுதியை ஒட்டியுள்ள சுமார் 20 ஏக்கர் நில விவசாயிகள் மாங்குளம்  கண்மாய் நீரை நம்பியே நெல், கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகளையும், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். 
ஏற்கெனவே இக்கண்மாயின் நீர்வரத்துக் கால்வாய்களை உரிய முறையில்  பராமரிக்காததால் மழைக்காலங்களில் கூட  குறைந்த அளவு நீர்வரத்தே ஏற்படுகிறது. தற்போது பல மாதங்களாக இப்பகுதியைச்சுற்றியுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர்  இக்கண்மாயில் கலந்து வருகிறது.
இதனால் விவசாயத்திற்கான பாசன நீர் மாசடைந்துள்ளது. பாசன நீர் வீணாகி விடுவதால் இப்பகுதியில் விவசாயம் செய்வோர் அதிக செலவு செய்து மோட்டார் நீரைப் பயன்படுத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மாங்குளம் கண்மாயை நம்பியுள்ள விவசாயிகளின் நலன் கருதியும், மேலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்கும் பொருட்டும் அக்கண்மாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com