விருதுநகர் நகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டடப் பணி தொடங்க தாமதம்

விருதுநகர் நகராட்சியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்காக

விருதுநகர் நகராட்சியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்காக ஏலம் விடப்பட்டு மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இதுவரை பணிகள் தொடங்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். 
 விருதுநகர் நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தது. 
அந்த நிதியில் புதிய சாலைகள் அமைக்க ரூ 14.20 கோடி, மூன்று மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு ரூ.5 கோடி, நான்கு சுகாதார வளாகங்கள் கட்ட ரூ.60 லட்சம், தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக  மாற்ற ரூ.50 லட்சம், நினைவுத்தூண் அமைக்க ரூ.70 லட்சம், பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.1 கோடி, பழைய பேருந்து நிலையத்தில் கட்டடங்கள் மற்றும் காத்திருப்போர் அறை கட்ட ரூ. 1கோடி, நகராட்சி அலுவலக கட்டடம் கட்ட ரூ.2 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2015 மாத இறுதியில் விடப்பட்டது. இதில் சாலைப் பணிகள், சுகாதார வளாகங்கள் கட்டும் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. ஆனால், நகராட்சி அலுவலகத்தில் ரூ.2 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. 
இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் அமைந்திருந்த, சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், கணிப்பொறி அறை, நகராட்சித் தலைவர் அறை, ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த கட்டடம், மரங்கள் அகற்றப்பட்டன. மேலும், நகராட்சி தலைவர் அறை, பழைய வரி வசூல் மையத்திற்கு மாற்றப்பட்டது. 
அதன் பிறகு, பழைய கட்டடத்தை பாதியில் இடித்தவாறு விட்டு சென்றனர். இதனால் இட நெருக்கடியில் அலுவலர்கள் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  நகராட்சி புதிய அலுவலக கட்டடத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com