ராஜபாளையம், சாத்தூர் கோயில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாதர் கோயில் மற்றும்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ராஜபாளையம் அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாதர் கோயில் மற்றும் சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில்களில் மாவட்ட நீதிபதி ஆ.முத்துசாரதா புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார்.
இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் உள்ள பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் ராஜபாளையத்தில் மாயூரநாதர் கோயிலில்  விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆ.முத்துசாரதா ஆய்வு மேற்கொண்டார்.
கோயிலில் சுகாதாரம் பராமரிக்கப்படும் முறைகள், அன்னதான மண்டப சமையலறை,  பக்தர்கள் மற்றும் கோயில் சிலைகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்,  
குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்தும், காலிப்பணியிடங்கள் குறித்தும், பண்டிகை நாட்களில் செய்யப் படும் ஏற்பாடுகள் குறித்தும் செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார். கோயில் வளாகங்கள் சுத்தமாக இருக்க கூடுதலாக குப்பைத் தொட்டிகள் வைக்கவும், பாலிதீன் பைகளை கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.
சாத்தூர் : சாத்தூரில்  500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்கடாசலபதி கோயிலில்  மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி முத்துசாரதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்,  கோயில் நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகளும், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என அவர் உத்தரவிட்டார். 
மேலும் கோயில் வளாக பகுதியில்  தேங்கியுள்ள கழிவுநீரை துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்ற வேண்டும் எனவும்,  பக்தர்களுக்கு  அன்னதானம் முறையாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி கோயில் அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சாத்தூர் நீதிமன்ற நீதிபதிகள் கீதா, சண்முகவேல் ஆகியோர் உடன் இருந்தனர். 
இதுகுறித்து கோயில் ஆணையாளர் தனலட்சுமி கூறியது:  
தற்போது தான் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளுக்கு முறையான வாடகை பெறப்பட்டு வருகிறது. மேலும் கோயிலின் அனைத்து பணிகளை செய்வதற்கு மேல் அதிகாரியிடம் கலந்தாலோசித்து செய்ய வேண்டியுள்ளது. 
இதனால் கோயில் பராமரிப்பு பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.  கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணைச்செயலாளர் கலையரசன் நீதிபதியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், காசி விஸ்வநாதர் கோயில் தெப்பத்துக்கு வரும் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com