ஆனைக்குட்டம் அணை வறண்டதால் விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்

ஆனைக்குட்டம் அணை வறண்டு காணப்படுவதால் விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் உள்ள பழுதை நீக்க நகராட்சி


ஆனைக்குட்டம் அணை வறண்டு காணப்படுவதால் விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்திலிருந்து குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் உள்ள பழுதை நீக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 விருதுநகர் நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில், 12, 300 வீடுகளில் நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகருக்கு தினந்தோறும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஆனைக்குட்டம் நீர்த்தேக்கம் மூலம் தலா 22 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகருக்கு அதிகளவு குடிநீர் வழங்கி வந்த ஆனைக்குட்டம் அணை தற்போது வறண்டு விட்டது. இதனால், அணைப் பகுதியில் உள்ள கிணறுகள் மூலம் குறைந்த அளவு குடிநீர் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து தினந்தோறும் வழங்கப்பட்டு வந்த 22 லட்சம் லிட்டர் குடிநீரும் குறைய வாய்ப்புள்ளது. மேலும், இத்திட்டத்திலிருந்து குடிநீர் கொண்டு வரும் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டாலும், குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.
 ஒண்டிப்புலி நீர்த் தேக்கத்தில் 60 அடி வரை தண்ணீர் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அங்கிருந்து விருதுநகருக்கு வரும் குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, குழாய் உடைப்பை கண்டறிய ஒண்டிப்புலியிலிருந்து சோதனை முறையில் குடிநீர் கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் குழாய்களை சீரமைக்கலாம். மேலும், விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி சாலை, அகமது நகர் முதலான இடங்களில் தலா ரூ.160 கோடி மதிப்பில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டு காட்சிப் பொருளாகவே உள்ளது. இத்தொட்டிகளுக்கான குழாய் பதிக்காததால் குடிநீர் ஏற்ற முடியாத நிலை உள்ளது. இந்த இரண்டு மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளுக்கும் ரூ.1 கோடி மதிப்பில் குழாய் பதிக்க கருத்துருவானது, நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பியும் இதுவரை நிதி வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இந்த மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்தால் பொதுமக்களுக்கு மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நகராட்சி நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com