ஸ்ரீவிலி. பகுதியில் சூறாவளி: 200 ஏக்கரில் மா மரங்கள் வேரோடு சாய்ந்தன: அரசு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் திங்கள்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றில் 200 ஏக்கரில் மா மரங்கள் சாய்ந்தன. 


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் திங்கள்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றில் 200 ஏக்கரில் மா மரங்கள் சாய்ந்தன. 
ஸ்ரீவில்லிபுத்தூர்  மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மம்சாபுரம், செண்பகத்தோப்பு ஆகிய பகுதிகளில் மாந்தோப்புகள் அதிகம் உள்ளன. மேலும் தென்னை, பலா மர தோட்டங்களும் உள்ளன. தற்போது மாம்பழ சீசன் என்பதால் மாந்தோப்புகளில் மாங்காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தன.
கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் கடும் வெயில் அடித்து அனல் காற்று வீசி வந்தது. அதன்பின்பு, கடந்த இரு தினங்களாக நிலைமை மாறியிருந்தது. மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வந்தது. 
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மலை அடிவாரப் பகுதியான செண்பகத்தோப்பு, மம்சாபுரம் ஆகிய பகுதிகளில் திடீர் சூறாவளி காற்றும் பரவலான மழையும் பெய்தது. சுமார் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக காற்று வீசியுள்ளது. இதில் செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மா மரங்களில் காய்த்து தொங்கிய மாங்காய்கள் அனைத்தும் கீழே விழுந்து சேதம் அடைந்தன. பல விவசாய நிலங்களில் மா, பலா, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சுமார் 200 ஏக்கரில் மா மரங்கள் சாய்ந்து, ஏக்கருக்கு ரூ.20,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
இந்த திடீர் பாதிப்பால் மா விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். தமிழக அரசு மற்றும் தோட்டக்கலை வேளாண்மை அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com