காரைக்காலில் மின்சாரம்,  மரங்கள்  சீரமைப்புப் பணிகள் தீவிரம்

கஜா புயல் சீற்றத்தால், காரைக்காலில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை

கஜா புயல் சீற்றத்தால், காரைக்காலில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை தீவிரத்தால் சனிக்கிழமை மின் விநியோகம் பரவலாக சீரானது. சாலையில் முறிந்து விழுந்த மரக் கிளைகள் மற்றும் வேரோடு சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கஜா புயல் தாக்கத்தால் காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மரங்கள், 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மரங்களும், கிளைகளும் மின்கம்பியின் மீது விழுந்ததால், பல இடங்களில் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காரைக்காலுக்கு திருவாரூரிலிருந்து மின்சாரமும், காரைக்காலில் உள்ள பி.பி.சி.எல். மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரமும் விநியோகிக்கப்படுகிறது.  இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 250 -க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் தீவிரமான களப் பணியை வெள்ளிக்கிழமை காலை முதல் மேற்கொள்ளத் தொடங்கினர். 
புதுச்சேரியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் 4 லாரிகளில் மின் சாதனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமைக்குள் பெரும்பான்மையான இடங்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து மின் விநியோகம் தரப்பட்டு விடும். பணிகள் விரைவு கதியில் மின்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என வேளாண் மற்றும் மின்துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார். இதற்கிடையே வெள்ளிக்கிழமை மாலை திருநள்ளாறிலும், காரைக்கால் நகரில் குறிப்பிட்ட பகுதியிலும் மின்சாரம் தரப்பட்டது. திருமலைராயன்பட்டினம், நிரவி பகுதியில் இரவு 9 மணியளவில் மின்சாரம்  தரப்பட்டது. மற்ற பகுதிகள் இரவு முழுவதும் இருண்டே காணப்பட்டது. சனிக்கிழமை காலை முதல் மின்துறையினர் புதிதாக கம்பங்கள் நடுதல், கம்பிகளை இணைத்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டினர்.  பழுதான மின் மாற்றிகளை மாற்றும் பணியிலும் ஈடுபட்டனர். இதனால் படிப்படியாக மின் விநியோகம் மாவட்டத்தில் சனிக்கிழமை தரப்பட்டது.
இதுகுறித்து மின்துறை செயற்பொறியாளர் ராஜேஷ்சன்யால் சனிக்கிழமை கூறும்போது, மின்கம்பங்கள், மின் மாற்றிகள், கம்பிகள்  சீரமைப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 75 சதவீதப் பகுதிகள் நிறைவு பெற்றுள்ளன. சனிக்கிழமை இரவுக்குள் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் தரப்பட்டுவிடும். ஒருசில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் தரப்படும் என்றார். பொதுப் பணித் துறையினர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் கிடந்த மரங்கள், கிளைகளை அப்புறப்படுத்தும்  பணியில் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட்டனர். சனிக்கிழமை மட்டும் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் சாலையில் கிடந்த  மரக்கிளைகள், இலைகள் கொண்டு செல்லப்பட்டன.
வணிக நிறுவனங்களின் டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் புயல் சீற்றத்தால் விழுந்து சேதமடைந்தன. இவற்றை அவரவர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் முழுமையாக விநியோகம் செய்யும் நிலையும், மரங்கள் அப்புறப்படுத்தும் பணியும் நிறைவுபெறும் என அரசுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com