படகுகள் சேத கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

கஜா புயலால் படகுகள் சேதமடைந்திருப்பதாக தெரிவித்த தகவலின்பேரில், காரைக்காலில்

கஜா புயலால் படகுகள் சேதமடைந்திருப்பதாக தெரிவித்த தகவலின்பேரில், காரைக்காலில் மீன்வளத்துறையினர் கணக்கெடுப்புப் பணியை சனிக்கிழமை தொடங்கினர்.
காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களில், சிறிய வகை ஃபைபர் படகுகள் தினமும் காலை நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க கொண்டு செல்லப்பட்டு, காலை 8 மணிக்குள் கரையோரத்துக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த வகை படகுகள் கடலோரத்திலேயே நிறுத்தப்படுவது வழக்கம். கஜா புயல் சீற்றத்தால், காரைக்கால் கடலோரத்தில் நிறுத்தியிருந்த படகுகள் பல, சவுக்கு மரத் தோப்புக்கு அடித்துச் செல்லப்பட்டும், ஒன்றோடு ஒன்று மோதியும் சேதமடைந்துவிட்டதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். காரைக்காலுக்கு புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வெள்ளிக்கிழமை வந்த புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியிடமும் இதை தெரிவித்தனர். முதல்வரும் பல மீனவ கிராமங்களில் படகுகள் சேதத்தை நேரில் பார்வையிட்டார்.
புயல் சேதங்களை கணக்கெடுப்பு செய்ய மாவட்ட நிர்வாகத்தினருக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதனடிப்படையில், காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் கவியரசன் தலைமையிலான குழுவினர், பட்டனச்சேரி பகுதியில் உள்ள படகுகள், பதிவு செய்யப்பட்ட படகுகள், இவற்றில் சேதம் அடைந்தவை, சேதத்தின் தன்மை குறித்து மீனவர்களை சந்தித்து விவரம் கேட்டறிந்தனர். படகுகள் சேதத்தையும் நேரில் பார்வையிட்டு குறிப்பெடுத்துக்கொண்டனர். 
மாவட்டத்தின் அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள படகுகள், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள் என அனைத்தும் அடுத்த ஓரிரு நாள்களில் சேத மதிப்பீடு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com