மத்திய நிதி மூலம் சாலைகள், மின்சார கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

மத்திய நிதியின் மூலம், காரைக்காலில் மின்சாரம், சாலைகள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என காரைக்கால் போராட்டக் குழு  வலியுறுத்தியுள்ளது.

மத்திய நிதியின் மூலம், காரைக்காலில் மின்சாரம், சாலைகள் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என காரைக்கால் போராட்டக் குழு  வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி. செல்வசண்முகம் சனிக்கிழமை கூறியது :
1952 -ஆம் ஆண்டு தாக்கிய புயலுக்குப் பின் காரைக்காலில் கஜா புயலின் தாக்கம் மிகுதியாக இருந்து விட்டது. புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட வந்த புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, காரைக்காலில் ஒருசில பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார். 
புதுச்சேரியிலிருந்து எந்தவொரு உயரதிகாரிகளும் வரவில்லை. காரைக்காலில் முதல்வர் 2 நாள்கள் முகாமிட்டு புயலால் சேதமடைந்த கடலோர கிராமங்கள், விவசாயம், சாலைகள், மின்சாரம்  தொடர்பான பலவற்றைப் பார்வையிட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால், முதல்வரின் செயல் அவ்வாறு அமையாதது காரைக்காலை புறக்கணிப்பதாகவே கொள்ள முடியும்.
ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டன. மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுவிட்டது. சாலைகள் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே நகரில் குடிநீர் குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட  சாலைகளோடு இந்த பாதிப்பும் சேர்ந்து மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியிருக்கிறது. காரைக்காலில் மின்துறையின் மின் விநியோக கட்டமைப்புகள் 60 ஆண்டுகள் கடந்துவிட்டதாகும். எனவே, இதுபோன்ற புயலால் அந்த துறைக்கு பெரும் பாதிப்பு வரத்தான் செய்யும். புதுச்சேரி முதல்வர், மத்திய அரசை அணுகி காரைக்காலுக்குத் தேவையான நிவாரணத் தொகையைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உடனடி நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வீதமும், 20 கிலோ இலவச அரிசியும் வழங்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து பெறும் நிவாரணத் தொகை முழுவதையும் காரைக்காலுக்கே செலவிட வேண்டும். குறிப்பாக, சாலைகள், மின்சாரத்தின் கட்டமைப்பை நிரந்தர நிலையில் மேம்படுத்த வேண்டும்.
புயல் காற்றினால் விவசாயத்தில் இளம் பயிர்களும் சேதமடைய வாய்ப்புண்டு. பயிர் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். பூச்சித் தாக்குதல் ஏற்படும். எனவே, இதுகுறித்த கணக்கெடுப்பை செய்து விவசாயிகளுக்கும் நிவாரணம் தர வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com